சவுதியில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்கள் இந்தியா திரும்ப நடவடிக்கை!
ரியாத் ஆக.13:
சவுதியில் சிக்கி தவிக்கும் 13 இந்திய தொழிலாளர்கள், சவுதி சமூகசேவை நிறுவனத்தின் உதவியால் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 6 மாதத்துக்கு முன்னர் இந்தியாவில் இருந்து 13 தொழிலாளர்கள், சவுதியின் ரியாத்தில் உள்ள உணவு விடுதி ஒன்றுக்கு வேலைக்காக சென்றனர். இந்தியாவிலுள்ள ஏஜென்ட் மூலம் இவர்களுக்கு அங்கு மாதம் 800 சவுதி ரியால் சம்பளம், இலவச உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த தொழிலாளர்கள், ரியாத் சென்று சேர்ந்ததும், உணவு விடுதி வேலையில்லாமல் அங்கு வேறு பல கடின வேலைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இவர்களுக்கு 6 மாதகாலமாக சம்பளமும் அந்நிறுவனம் தரவில்லை. இதையடுத்து, இவர்கள் இந்திய ஏஜென்டை தொடர்பு கொள்ள முயன்றனர். இந்திய ஏஜென்டை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதன் பின்னரே இந்த ஏஜென்ட், இவர்களிடம் பணத்தை கையாடல் செய்ததும் மற்றும் உணவு விடுதி வேலை என்று கூறி ஏமாற்றியுள்ளதும் தெரியவந்தது.
மேலும், அங்கு தங்குவதற்கும், நாடு திரும்புவதற்கான விசா செலவுகள் உள்ளிட்டவைகளுக்காக 7,000 ரியால் கடன் வாங்கிக் கொள்ளுமாறும் அந்நிறுவனம் கூறிவிட்டது. இதனால் அவர்களின் நிலை மோசமடைந்தது. இவர்களுக்கு நாடு திரும்புவதற்கு விசா கிடைக்காவிட்டால் அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்கு சிறைவாசம் அனுபவிக்க நேரிடும்.
இதைத் தொடர்ந்து, இந்த தொழிலாளர்கள் குறித்து அரபு ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, இஸ்லாமிக் கல்ச்சுரல் பவுண் டேஷன் என்ற சமூகசேவை அமைப்பு இந்திய தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்தது.
இந்திய தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்த சவுதி ஏஜென்டிடம் பேச்சு நடத்தப்பட்டது. இதில் இவர்களுக்கு தரவேண்டிய 6 மாத சம்பளம் மற்றும் அவர்கள் நாடு திரும்புவதற்கு ஆகும் விசா செலவுகளை அந்த நிறுவனமே ஏற்று கொண்டது. இதையடுத்து இந்த தொழிலாளர்கள் பத்திரமாக விரைவில் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Category: வளைகுட செய்தி
0 comments