உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!
சிட்னி: இதய துடிப்பு நின்று போன இதயத்தை, மற்றொருவருக்கு பொருத்தி அதை இயங்கவைத்து ஆஸ்திரேலிய டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். உலகில் முதல் முறையாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதய மாற்று அறுவை சிகிச்சையில் வழக்கமாக மூளை சாவு அடைந்தவரின் துடிக்கும் இதயத்தை எடுத்து, அதை ஐஸ் பெட்டியில் 4 மணி நேரம் வரை பாதுகாத்துதான் மற்றொருவருக்கு பொருத்துவர். இறந்தவரின் இதயம் இதுவரை பயன்படுத்தப்பட்டது இல்லை. ஆனால், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் இதய நோயாளிகள் 3 பேருக்கு, தானமாக பெறப்பட்ட இறந்தவர்களின் இதயத்தை பொருத்தி அதை செயல்பட வைத்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த இதயங்கள் அனைத்தும் துடிப்பை நிறுத்தி 20 நிமிடங்கள் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இதயம் மிசேல் கிரிபிலாஸ் என்ற பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. 57 வயதான அவர் தற்போது நலமுடன் உள்ளார். தான் 40 வயதுடையவர் போல் வயது குறைந்து இளமையாகிவிட்டது போல் உணர்கிறேன் என அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இதேபோல் மேலும் 2 பேருக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த டாக்டர் குமுத் திதால் கூறுகையில், ‘‘இறந்த இதயத்தில் காற்றை செலுத்தியுள்ளேன்.
நவீன தொழில்நுட்பம்தான் இதற்கு காரணம். இதயத்தை பாதுகாக்கும் திரவத்தில் வியக்கத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது இதயத்தை சூடாக பாதுகாத்து மீண்டு செயல்பட வைத்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ‘‘ஹார்ட் இன் ஏ பாக்ஸ்’’ என்ற இயந்திரத்தில் வைத்து இறந்த இதயம் பாதுகாப்பாக எடுத்து வரப்படுகிறது. இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம், உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த முறை மூலம் இனி இதயங்களை அதிகளவில் தானமாக பெற முடியும். இதன் மூலம் மேலும் 30 சதவீத இதயமாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளை காப்பாற்ற முடியும்.
* இதய மாற்று அறுவை சிகிச்சையில் உலகில் புதிய அத்தியாயம் துவக்கம்.
* இறந்தவரின் இதயத்தை இதய நோயாளிக்கு பொருத்தி புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
* இந்த சாதனையை சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனை டாக்டர்கள் குழு நிகழ்த்தியுள்ளது.
* டாக்டர்கள் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ஒருவரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
* இதுவரையில் 3 பேருக்கு இறந்தவரின் இதயத்தை பொறுத்தும் இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
* செயின்ட் வின்சென்ட் இதய மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர் பேராசிரியர் பீட்டர் டொனால்டு கூறுகையில், “இந்த புதிய முயற்சி, இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்Ó என்று நம்பிக்கை தெரிவித்தார்.
* மருத்துவத்தில் புதிய முன்னேற்றம் என்று பிரிட்டிஷ் ஹார்ட் பவுன்டேஷன் பாராட்டியுள்ளது.
Category: ALL Lab, உலக செய்தி
0 comments