ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!
ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு
அமீருல் முஃமினீன் அவர்களே.., உங்களிடமிருந்து தொடர்ந்து எங்களுக்குக் கட்டளைகள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால் அந்த உத்தரவுக் கடிதங்களில் தேதிகள் குறிப்பிடப்படவில்லை, சிலவேளைகளில் கடிதத்தில் உள்ள வாசகங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றன, எனவே அவற்றில் எது முந்தையது, எது பிந்தையது என்ற குழப்பம் நீடிக்கின்றது, உங்களது உத்தரவுகளை சரிவரப் புரிந்து கொள்ள இயலவில்லை என்று பஸராவின் கவர்னராக இருந்த அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் ஒரு கடிதத்தை உமர் (ரலி)அவர்களுக்கு எழுதினார்கள்.
பஸராவின் கவர்னரது சந்தேகம் உமர் (ரலி) அவர்களைச் சிந்திக்க வைத்தது. அதேநேரத்தில் யமன் தேசத்திலிருந்து ஷஃபான் மாதம் குறிப்பிடப்பட்டதொரு பணம் வந்திருந்தது. சரி.., அப்படி என்றால் இனி கடிதங்களில் மாதத்தைக் குறிப்பிடலாம் என்றால்.., அது இந்த வருடத்தில் உள்ளதா.., அல்லது அடுத்த வருடத்தியதா என்ற சந்தேகத்தையும் உருவாக்கி விடுமே என்று சிந்தித்தார்கள். உடனே, தோழர்களின் உதவியை நாடி இது குறித்து அவர்களிடம் ஆலோசனை நடத்தினார்கள்.
.
சிலர் ரோமர்களின் முறையையும், இன்னும் சிலர் பாரசீக முறைப்படியும் காலண்டர் உருவாக்கிக் கொள்ளலாம் என்றார்கள். ஆனால் உமர் (ரலி) அவர்களோ., நாம் முஸ்லிம்கள்.., முஸ்லிம்களுக்கென்று ஒரு நாட்காட்டி வேண்டும் என்றார்கள். சரி.., நம்முடைய தசாப்தம் எப்பொழுதிலிருந்து துவங்குகின்றது? என்று கூறுங்கள் என்றார்கள் உமர் (ரலி) அவர்கள்.
.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்திலிருந்து என்று ஒருசிலர் கூறினார்கள். இன்னும் சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரண நாளிலிருந்து என்றார்கள். அப்பொழுது அலி (ரலி) அவர்கள் கூறினார்கள், முஸ்லிம்களினுடைய மறுமலர்ச்சி என்பது மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் புறப்பட்ட நாளிலிருந்து ஆரம்பமாகின்றது என்றார்கள், அலி (ரலி) அவர்களினுடைய இந்த ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ரபிய்யுல் அவ்வல் மாதம் தனது ஹிஜ்ரத்தை ஆரம்பித்தார்கள். அவ்வாறென்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் புறப்பட்ட பொழுது அந்த ஆண்டின் இரண்டு மாதங்களும் எட்டு நாட்களும் கடந்து விட்டிருந்தன. சரி.., ஹிஜ்ரியைக் கணக்கு வைத்து ஆண்டு என்றால், மாதங்களில் எந்த மாதத்தினை முதல் மாதமாகக் குறிப்பது என்ற குழப்பம் ஆரம்பமானது.
சிலர் ரஜப் மாத்திலிருந்து ஆரம்பமாக வேண்டும் என்றார்கள், சிலர் ரமளான் மாதம் புனிதமிக்கது, எனவே அதிலிருந்து ஆரம்பமாக வேண்டும் என்றார்கள், சிலர் ஹஜ் புனிதமிக்கது அதிலிருந்து தான் துவங்க வேண்டும் என்றார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.., அரேபியாவில் புத்தாண்டு என்பது முஹர்ரம் மாதத்திலிருந்து தான் துவங்குகின்றது என்றார்கள். உஸ்மான் (ரலி) அவர்களது ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அன்றிலிருந்து புத்தாண்டின் முதல் மாதமாக முஹர்ரம் அறிவிக்கப்பட்டது. ஹிஜ்ரி காலண்டர் முறையும் உருவானது. பின்னர் இந்த முடிவு அனைத்துப் பிரதேசங்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
Category: சமுதாய செய்தி
0 comments