உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!
உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் 2011-ன் கீழ், பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்,
வட்டாட்சியர் ஆகியோரது அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பெறப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் அளிக்க கல்வி உதவித்தொகை பெற கல்வி ஆண்டு தொடங்கப்பட்ட 6 மாதங்களுக்குள், திருமண உதவித்தொகை பெற திருமண
தேதிக்கு முந்தைய 3 மாதங்களுக்குள் அல்லது திருமண தேதிக்குப் பிறகு வரும் 6 மாதங்களுக்குள் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை பெற இறந்த
தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள், விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு, விபத்து காயமடைந்ததற்கான உதவித்தொகை பெற சம்பவ நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் காவல்
துறையினரின் விபத்து அறிக்கையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
முதியோர் உதவித் தொகை, ஆதரவற்ற விவசாய கூலித் தொழிலாளர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் இல்லை. மேற்கண்ட கால அளவிற்குள்
விண்ணப்பம் அளிக்க இயலாத விண்ணப்பதாரர், காலதாமதமாக மனு செய்ததற்கான காரணங்களை கணக்கில் கொண்ட பின், தாமத மனுக்களின் மீது உயர்
அலுவலர்களுக்கு ஒப்புதல் வழங்க தமிழக அரசால் அதிகாரம் அளிக்கப்படுகிறது.
அதனடிப்படையில், குறிப்பிடப்பட்ட கால அவகாசத்துக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலிக்க, பெரம்பலூர் சார் ஆட்சியருக்கு 3 மாதங்கள் வரையிலும், மாவட்ட
வருவாய் அலுவலருக்கு 3 மாதங்களிலிருந்து 6 மாதங்கள் வரையிலும், மாவட்ட ஆட்சியருக்கு 6 மாதங்களிலிருந்து 1 ஆண்டு வரை தாமத மனுக்களின் மீது ஒப்புதல்
அளிக்க அதிகாரம் அளிக்கப்படுகிறது.
5.8.2014 தேதிக்கு முன் பெறப்பட்ட நிலுவை மனுக்களின் மீது கால அவகாசம் பொருந்தாது. மேலும், உழவர் பாதுகாப்புத் திட்டம் 2011-ன் கீழ் விபத்து மரணம் மற்றும்
ஈமச்சடங்குக்கான உதவித் தொகையானது பாம்புக்கடி உள்ளிட்ட விஷக்கடி, மின்னல் மற்றும் வெள்ளம் ஆகிய காரணங்களால் எதிர்பாராதவிதமாக ஏற்படும் உயிரிழப்பைக்
கூட விபத்து மரணமாக கருதி விபத்து நிவாரணம் வழங்கப்படும். மேற்கண்ட காரணங்களில் ஏற்படும் விபத்து குறித்து காவல் துறையினரிடமிருந்து பெறப்பட்ட
அறிக்கையுடன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் அவர்.
Category: மாவட்ட செய்தி
0 comments