ஆக. 15-ல் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு!!
சர்வதேச அளவில் சந்தை நிலவரங்கள் சாதகமாக உள்ளதால், சுதந்திர தினத்தின்போது பெட்ரோல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் பி.அசோக் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் விலையை 2 வாரங்களுக்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறோம். கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி லிட்டருக்கு ரூ.1.09 விலை குறைக்கப்பட்டது.
மீண்டும் பெட்ரோல் விலை குறித்து வரும் 15-ம் தேதி ஆய்வு செய்யவுள்ளோம். விலையை குறைப்பதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. எவ்வளவு ரூபாய் குறைக்கப்படும் என்பதை வரும் 15-ம் தேதி இரவுதான் முடிவு செய்வோம்” என்றார்.
கடந்த 2010-ம் ஆண்டு முதல் பெட்ரோல் விலை நிர்ணயம் தொடர்பான தனது கட்டுப்பாட்டை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. அப்போதிலிருந்து சர்வதேச கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 2.50 வரை குறைப்பதற்கான சாத்தியம் உள்ளதாக மத்திய அரசு மற்றும் தொழில்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Category: மாநில செய்தி
0 comments