.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பணம்+நோய் = வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம்!

Unknown | 10:54 PM | 0 comments





‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’- ஆனால் பணம் என்ற செல்வத்தின் மீது
நாட்டம் கொண்டு வளைகுடா நாடுகளுக்கு பறக்கும் இந்தியர்களின்
ஆரோக்கியத்திற்கு என்ன நிகழ்கிறது?



பணத்தை சம்பாதித்துவிட்டு தாயகம் திரும்பும் வேளையில் ஆரோக்கியம் என்ற
செல்வம் சீரழிந்து போயிருக்கும். கை நிறைய பணமும்,உடல் நிறைய நோய்களையும்
சுமந்துகொண்டு வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம்
திரும்புகின்றனர். வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்களைப் பொறுத்தவரை
கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகள் என்ன என்பது குறித்து சிறிது ஆராய்வோம்.

மனதில் எதிர்கால வாழ்க்கையைக் குறித்த கற்பனை கோட்டைகளை எழுப்பிவிட்டு
இந்தியர்கள் வளைகுடா நாடுகளை நோக்கி பறக்கின்றனர். சூட்டினால் தகிக்கும்
பாலைவன மண்ணில் ஒரு பூலோக சுவர்க்கத்தை தங்களது வாழ்க்கையில் கட்டலாம்
என்ற நம்பிக்கையில் தாயகத்தை துறந்து அந்நிய தேசத்திற்கு செல்லுகின்றனர்.
ஆனால், அங்கு சென்ற பிறகுதான் தாம் சந்திக்கவிருக்கும் நெருக்கடிகள்
ஒவ்வொன்றாக தென்பட துவங்குகிறது.


வானமும், பூமியும் கைவிட்ட உலகம். நதிகளும், வயல் வரப்புகளும்,
மரங்களும், கிளிகளும் இல்லாத நாடு. குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து
வெளியே வந்தால் மண்டையை பிளக்கும் சூடு. இதனை விட சொந்த ஊரையும்,
குடும்பத்தையும் பிரிந்த வேதனை. மேலும் அவர்களது பாதுகாப்புக் குறித்த
கவலை.
ஒரு மரத்தைப் பறித்து இன்னொரு நாட்டில் கொண்டு போய் நட்டால் ஏற்படும் அதே
நிலைமைதான் வளைகுடா வாழ் இந்தியர்களின் நிலைமையும்.

மாறிய காலச்சூழலுடன் ஒத்துப்போகாத உடல்நிலை அவர்களது முக்கிய பிரச்சனையாக
மாறுகிறது. காற்று, நீர், உணவு இவற்றில் ஏற்படும் திடீர் மாற்றம் செடி
கொடிகளைப் போலவே அவர்களது மனமும் வாடிப்போகிறது. இந்த வாட்டத்தை
எதிர்கொள்ள முடியாமல் வீழ்ந்து போவோரும் உண்டு.
கவலைகளுக்கும்,நெருக்கடிகளுக்கும் மத்தியில் அவர்கள் தங்களது சொந்த
ஆரோக்கியத்தைக் குறித்து மறந்து போகின்றார்கள். முற்றிலும் வித்தியாசமான
வாழ்க்கை முறை வளைகுடா வாழ் இந்தியர்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு
பாதிக்கிறது என்பதை பார்ப்போம்.

சிண்ட்ரோம் எக்ஸ்

வளைகுடா வாழ் இந்தியர்களை காத்திருக்கும் நோய்களின் கூட்டுப் பெயர் தாம்
சிண்டோம் எக்ஸ். இதனை செல்லப் பெயர் என நீங்கள் கருதினாலும் தவறில்லை.
நீரழிவு(சர்க்கரை வியாதி), கொலஸ்ட்ரோல், இரத்த அழுத்தம், உடல் பருமன்
ஆகிய நோய்கள் அடங்கியதுதான் சிண்ட்ரோம் எக்ஸ். இவையெல்லாம் வாழ்க்கை முறை
மாறுவதால் உருவாகும் நோய்களாகும். மிக விரைவில் வளைகுடா வாசிகள் இந்த
நோய்களின் பிடியில் சிக்கிவிடுகின்றார்கள்.
வாழ்க்கை முறை ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்பதை இதில்
இருந்தே விளங்கிக் கொள்ள முடியும்.
வளைகுடா வாசிகளின் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம் உடலின்
செயல்பாடுகளை ஒவ்வொன்றாக பாதிக்கும் வேளையில்தான் நோய்களும் ஒவ்வொன்றாக
குடிக்கொள்கிறது.




சொந்த உடல்நிலைக் குறித்து அவர்களில் பெரும்பாலோர் கவலைப்படுவதில்லை.
இவ்வாறு சிண்ட்ரோம் எக்ஸ் அல்லது வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு
வாழ்க்கையை கழிக்கின்றார்கள் வளைகுடா வாசிகள்.

வளைகுடா வாசிகளை(வளைகுடா வாழ் இந்தியர்களை) நோயில் தள்ளும் காரணிகள்

மனச்சோர்வு(depression) நோய்களை உருவாக்கும் மனோரீதியான பிரச்சனைகள்
நாட்டையும், வீட்டையும் துறந்து செல்லும் இந்தியர்களை முதலில் பாதிப்பது
நெருக்கடிகளாகும். குடும்பத்தைக் குறித்த கடுமையான கவலை, புதிய இட
சூழலுடன் பொருந்திப் போவதில் ஏற்படும் சிரமம், பணி இடங்களில் சந்திக்கும்
பிரச்சனைகள், பணிச் சுமை, வேலையில் அதிருப்தி, தனிமை ஆகியன
மனநெருக்கடிகளை உருவாக்குபவையாகும்.
ஓய்வு, உல்லாசம், நிம்மதியான உறக்கம், உடற்பயிற்சி, நட்புறவுகள்
இவற்றையெல்லாம் புதிதாக வளைகுடா செல்லும் நபர் இழக்கவேண்டிய நிலைமை
உருவாகிறது.
மன நெருக்கடிகளுக்கு ஆளாகும் சிலர் நிம்மதியை தேடுவதாக கூறி புகை,
மதுபானம் போன்ற தீயப்பழக்கங்களுக்கு அடிமையாகிப் போகின்றனர்.
உள்ளத்திற்கும், உடலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதால் மன
நெருக்கடிகளின் பலன் உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கிறது.

மனோரீதியான நெருக்கடிகள் காரணமாக வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றத்தால்
உருவாகும் நோய்கள் ஒவ்வொன்றாக வளைகுடா வாசிகளை பாதிக்கத் துவங்கின்றன.
வளைகுடா வாழ் இந்தியர்களில் ஒரு குறிப்பிட சதவீதம் பேர்
மனச்சோர்வால்(depression) பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள மருத்துவர்கள்
கூறுகின்றனர். ஆனால் இவர்களில் பெரும்பாலோர் இத்தகைய மனச்சோர்வுக்கு உரிய
சிகிட்சையை பெற முயலுவதில்லை.
மன ரீதியான நெருக்கடிகளை சந்திக்கும் வேளையில் குடும்பத்தினரின் ஆதரவும்,
ஆறுதலும் கிடைக்காமல் போகும் பொழுது அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாவதாக
மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பெரும்பாலும் இதன் இறுதி முடிவு
தற்கொலையில் சென்று முடிவடைகிறது.
வளைகுடா நாடுகளில் தற்கொலை செய்வோரில் 43 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர்
என புள்ளிவிபரம் கூறுகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக பின்வருவன
சுட்டிக்காட்டப்படுகின்றன:
1.மோசமான பணி சூழல்
2.மோசமான வாழ்க்கை சூழல்
3.சம்பளம் உரிய நேரத்தில் கிடைக்காமை
4.பணி ஒப்பந்தங்களில் பிறழ்வு
5.பாஸ்போர்ட், விசா, அடையாள அட்டை ஆகியவற்றின் காலாவதி முடியும் வேளையில்
சந்திக்கும் பிரச்சனைகள்
6.ஏஜண்டுகளின் ஏமாற்று வேலைகள்
7.குடும்பத்தினரின் பிரிவு
8.கடன் உள்ளிட்ட பொருளாதார ரீதியான பிரச்சனைகள் ஆகியனவாகும்.
சுருக்கமாக கூறினால் வளைகுடாவசிகளின் மனதில் சிறகு முளைத்த கனவுகள்
ஒவ்வொன்றாக கருகிப் போகின்றன.
எதற்கும் தீர்வு காணமுடியாத சூழல் உருவாகும் பொழுது தற்கொலையில் அபயம்
தேடுகின்றார்கள். மேற்கூறிய பிரச்சனைகள் குறித்து முன்னரே
அறிந்திருந்தால், அவற்றை கையாளும் பக்குவமும், பொறுமையும் இருந்தால்
எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும். தற்கொலை
எந்தப்பிரச்சனைக்கும் தீர்வு அல்ல என்ற புரிந்துணர்வு வேண்டும். இத்தகைய
நபர்கள் மட்டுமே கடல் தாண்டி வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிப்பது
சிறந்தது. அவ்வாறு இல்லையெனில், சொந்த நாட்டிலேயே தொழில் புரிந்து
கிடைக்கும் சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டுவதுதான் உசித்தம்.

உணவு பழக்க வழக்கம்
சூழ்நிலைகள் அவர்களை மாற்றுகிறது என்பதுதான் சரியான காரணம்.
இட்லி-சாம்பார், தோசை-சட்னி, இவையெல்லாம் வளைகுடாவாசிகளில்
பெரும்பாலோருக்கு கனவாக மாறிவிடுகிறது. காய்கறிகள் இங்கே கிடைக்காமலா
உள்ளது? ஆனால், வேலை முடிந்து சோர்வாக வரும் பொழுது காய்கறிகளை நறுக்கி,
தேங்காயை துருவி உணவு சமைக்க அலுப்புத் தோன்றும். ஆகவே குக்கரில் சாதம்
தயாரித்து, ஏதேனும் ஒரு குழம்புடன் முடித்துக்கொள்ளும் போக்கே
பெரும்பாலோரிடம் காணப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது
சிக்கன் கறியாகும். தயாரிப்பதற்கு எளிது என்பதாலும், விலை மலிவு என்பது
சிக்கனை தேர்வுச்செய்ய காரணமாகும். இதனை 2,3 நாட்கள் உபயோகிப்போரும்
உண்டு. இவ்வாறு சிக்கன் அன்றாட வாழ்க்கையின் உணவாக மாறுகையில்
கொலஸ்ட்ரோல் சிண்ட்ரோம் உடலை ஆளத்துவங்கும்.
வளைகுடாவாசியின் உடல் எடைபோட்டு க்ளாமர் முகத்தில் தெரிந்தாலே
புரிந்துகொள்ளலாம் இது சிக்கனின் கொழுப்பு என்பதை. அதிக வருமானம் உடையோர்
மீன் வகைகளை உண்பார்கள். இதுவும் கொலஸ்ட்ரோலை கை நீட்டி அழைக்கும்
என்பதில் சந்தேகம் தேவையில்லை. காரணம் மாமிச உணவின் கொழுப்பை குறைக்க
நார்ச்சத்துள்ள காய்கறிகளை இவர்கள் உபயோகிப்பதில்லை. இவ்வாறு
பெரும்பாலோர் அதிக உடல் எடை பிரச்சனையை சந்திக்கின்றனர்.
சிக்கன் உணவின் அளவுக்கதிகமான உபயோகத்தால் மூல நோயால் அவதியுறுவோரும்
உண்டு. மேலும் சுத்தமான குடிநீரை தேவைக்கேற்ப அருந்தாதும் இப்பிரச்சனையை
உருவாக்குகிறது. கோடை காலங்களில் சூட்டையும், தாகத்தையும் தாங்கமுடியாமல்
கிடைத்த பானங்களை வாங்கி அருந்துவதால் சிறுநீரக கல்லும், மஞ்சள் காமாலை
நோயும் உருவாக காரணமாகிறது.

உணவும், உறக்கமும் முறை தவறும் பொழுது
10-18 மணிநேரம் தொடர்ச்சியாக பணியாற்றும் சூழல் ஏற்படும் இவர்களுக்கு
குறிப்பிட நேரத்தில் உணவு சாப்பிடவோ, தூங்கவோ முடியாது. ஸ்நாக்சும்,
ஏதேனும் கோலாக்கள் மூலமாக தற்காலிக பசியை அடக்குவோரும் உண்டு. ஏதேனும்
ஒரு வேளையில் இவர்கள் வயிறு முட்ட சாப்பிடுவார்கள். இது உடல் நலனுக்கு
கேடானது என்பது நமக்கு தெரிந்த விஷயம். இன்னும் சிலர் உண்டு. அவர்களுக்கு
காலை உணவே கிடையாது. பெரும்பாலும் காலை உணவை தவிர்ப்போர் காசை மிச்சம்
பிடிக்கவே இந்த வழியை கையாளுகின்றனர். இரவு தாமதமாக உணவை உண்டு, காலையில்
தாமதித்து எழுந்து மதிய உணவை சாப்பிட்டால் காலை உணவை தவிர்க்கலாம் என்ற
கொள்கையை சிலர் வகுத்து வைத்துள்ளனர்.
உணவுப் பொருட்களின் விலை ஏறுமுகமாக இருக்கும் சூழலில் சிலர் காசை
சேமிப்பதற்காக தங்களது உடல் ஆரோக்கியத்தை பலி கொடுக்கின்றனர்.

உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை
உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைதான் வளைகுடா வாசிகளுக்கு சொந்தம்.
நேரமின்மையே அதற்கு முக்கிய காரணம். நமது நாட்டைப்போல வளைகுடா நாடுகளில்
வேலைக்கு மட்டம் போட முடியாது. ஒரு நாள் லீவு கிடைக்கவே பெரும் பாடுதான்.
இந்நிலையில் அன்றாட வேலையை முடித்து விட்டு, உணவு தயாரித்து, துணிகளை
கழுகி, வீட்டிற்கு போன் செய்யவே நேரம் சரியாக இருக்கும். இந்நிலையில்
உடற்பயிற்சியைக் குறித்து சிந்திக்க முடியுமா? ஆகவே ரேசன் போல்
கிடைக்கும் நேரத்தில் அனைவரும் தவிர்க்க விரும்புவது உடற் பயிற்சியாகும்.
உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையும், கொழுப்பான உணவு வகைகளைக் கொண்ட
வாழ்க்கை முறையும் இணையும் பொழுது இயல்பாகவே உடல் நோய்களின் இருப்பிடமாக
மாறிவிடும்.நீரழிவு நோய்(சர்க்கரை வியாதி)போன்ற வாழ்க் கை முறையினால்
உருவாகும் நோய்கள் ஏற்பட உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையே காரணமாகும்.

ஓய்வில்லாத பணி!
பொதுவாகவே வளைகுடாவுக்கு வேலை தேடி வருவோருக்கு பணமே முக்கிய நோக்கம்
ஆகும்.அதனால்தான் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூக்கம் என்ற தத்துவம்
எல்லாம் இவர்களைப் பொறுத்தவரை வெத்து வேட்டுதான். பணிகளுக்கு இடையே ஒய்வு
என்பது செயல் திட்டத்திலேயே இல்லை. பெரும்பாலோர் 12-13 மணிநேரங்கள்
உழைக்கின்றனர். இதன் பலனாக கிடைப்பது முதுகு வலி.
முதுகு வலிக்கு முக்கிய காரணி மன அழுத்தம் ஆகும். வளைகுடா வாசிகளைப்
பொறுத்தவரை மன அழுத்தத்திற்கு எவ்வித பஞ்சமுமில்லை. இத்துடன்
உடற்பயிற்சியும் இல்லை என்றால் முதுகுவலி ஏற்படுவது இயல்பே.
நமது சிந்தனைப் போக்கை மாற்றி நமது ஆரோக்கியத்தைக் குறித்து சற்று
சிந்தித்து அதன் அடிப்படையில் வாழ்ந்தால் முதுகு வலி இல்லாத வாழ்க்கையை
சொந்தமாக்கலாம்.

ஆஸ்துமாவை உருவாக்கும் மணல் காற்றும், புகையும்!
பாலைவன மண்ணை வீசியடிக்கும் காற்றில் பறந்து வரும் மண் துகள்கள் மூச்சுக்
குழாய்க்குள் செல்கிறது. தாமதமில்லாமல் இவர்கள் ஆஸ்துமா நோயினால்
பாதிப்படைகின்றனர். மேலும் பாலைவனப் பகுதிகளில் உருவாகும் மணல் காற்றும்,
புகையும் வெளியிடங்களில் வேலை பார்ப்போருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இதனால் bronchitis என அழைக்கப்படும் மூச்சுக்குழாய் அழற்சி நோய்
ஏற்படுகிறது.

கடுமையான வெப்பம்
வளைகுடா வாசிகளால் தாங்க முடியாதது அங்கு கோடைகாலத்தில் நிலவும் கடுமையான
வெப்பமும், குளிர்காலத்தில் நிலவும் கடுங் குளிருமாகும்.
கோடை காலத்தில் 50 டிகிரி வரை சூடு நிலவும். குளிர் காலத்திலோ மைனஸ்
டிகிரியை அடையும். இவை இரண்டுமே அசெளகரியங்களை ஏற்படுத்தும் என்பது
சொல்லி தெரியவேண்டியதில்லை.
ஏர்கண்டிசன் இல்லாத வாழ்க்கையை இங்கு சிந்திக்க கூட முடியாது. ஆனால்
வெளியே வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் வெப்பத்தையும், குளிரையும்
சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும், நோயாளிகளும், ஆரோக்கியம்
இல்லாதவர்களும் சூடு தாங்கமுடியாமல் sun stroke காரணமாக நினைவு இழந்து
விழுவது வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை வழக்கமாகிவிட்டது. இதன் மூலம்
ஏற்படும் இழப்புகள் தங்களை பாதிக்காமலிருக்க ஒப்பந்தக்காரர்கள்
பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிச் செய்துள்ளனர். இவையெல்லாம் உயிரை
காப்பாற்றலாம், ஆனால் உடல்நலனை பாதுகாப்பதற்கு போதுமானது அல்ல.
பெனடால் என்ற உற்றத்தோழன்

வளைகுடா வாசிகளுக்கு பெனடால் என பெயர் சூட்டிய பாரசிட்டாமோல்
மாத்திரைதான் அவர்களின் பெரியதொரு பாதுகாவலன். தலைவலியா? காய்ச்சலா?
ஜலதோஷமா? ஒரு பெனடாலில் அவர்கள் ஆறுதலை தேடிக்கொள்வார்கள்.
வளைகுடாவுக்கு வரும் தொழிலாளர்களுக்கு காலநிலையில் ஏற்படும் மாற்றத்தால்
உடல்நிலை பாதிக்கப்படுவது வழக்கம். தலைவலியும், வைரஸ் காய்ச்சலால்
பாதிக்கப்படுவோர் உண்டு. இதற்கெல்லாம் மருத்துவமனைக்கு சென்று
காண்பிக்கும் வழக்கம் இல்லை. காராணம், சாதாரண நபர்களால் வளைகுடா
நாடுகளில் சிகிட்சை செலவை தாங்கமுடியாது. வேலைச்செய்து கிடைக்கும்
சம்பாத்தியம் முழுவதும் ஒரேயடியாக செலவழிந்து விடுமே என அஞ்சி இவர்கள்
எந்த நோய் வந்தாலும் உடனே பெனடாலை விழுங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு பெனடால் வளைகுடா வாசிகளின் உற்றத் தோழனாக மாறிவிட்டது. இதன்
எதிர்விளைவுகளை குறித்து சிந்திக்கவும் அவர்களுக்கு நேரமில்லை.

பல வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய பிறகே பெனடாலின்
பாதிப்புகள் குறித்து அவர்களுக்கு தெரியவருகிறது. பெனடாலை வழக்கமாக
உபயோகிக்கும் பழக்கமுடையவர்களுக்கு சிறுநீரகத்தையும், இதர உடல்
உறுப்புகளையும் பாதிக்கும் சாத்தியக் கூறுகளை உள்ளடக்கிய பாரசிட்டாமோல்
மாத்திரையைத்தான் தாம் இதுவரை உற்றத் தோழனாக கருதினோம் என்பதை அவர்கள்
புரிந்துகொள்வார்கள்.

தாயகத்தில் கிடைப்பதைவிட பல மடங்கு வருமானத்தை எதிர்பார்த்து இந்தியர்கள்
வளைகுடாவுக்கு வேலைக்கு செல்கின்றனர். ஆனால், திடீரென மாறும் வாழ்க்கைச்
சூழல் அவர்களை விரைவில் வாழ்க்கை முறை மாறுவதால் ஏற்படும் நோய்களில்
பிடியில் சிக்கவைக்கிறது.

இக்கட்டுரையின் துவக்கத்தில் கூறியபடி ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’
என்பதை புரிந்துகொண்டால் நாம் இந்த துயரங்களை தவிர்க்கலாம்.
உணவு முறையிலும், உடற்பயிற்சியிலும் நாம் கவனம் செலுத்தினால் சம்பாதித்த
பணத்துடன் தாயகம் திரும்பி சந்தோஷமாக வாழலாம். வளைகுடா வாழ் இந்தியர்கள்
மத்தியில் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து
நடத்தப்படவேண்டும் என்பதை இதன் மூலம் நாம் புரிந்துகொண்டிருப்போம்.

இந்திய தூதரகமும், வளைகுடா நாடுகளில் இயங்கும் வெளிநாடு வாழ்
இந்தியர்களுக்கான நல அமைப்புகளும் இப்பிரச்சாரத்தை தொடர்ந்து
முன்னெடுத்துச் செல்லவேண்டும். பணத்தை மட்டும் சேமித்தால் போதாது அதனை
அனுபவிக்க கூடிய ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வளைகுடா
வாழ் இந்தியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் வேகத்தில் ஆரோக்கியத்தை
தொலைத்துவிடாமல் எச்சரிக்கையாக இருப்போம்!


நன்றி :- http://www.thoothuonline.com/

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1