.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

யார் முஃமினூன்?

Unknown | 3:25 PM | 0 comments



யார் முஃமினூன்?

முஃமினூன் என்ற அரபு பதத்திற்கு அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொண்டவர்கள் என்று பொருள்.
அல்லாஹ் மீது விசுவாசம் கொண்டவர் யார் என்பதை உலக மக்களுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் அளித்த அல் குர்ஆனில் பார்ப்போம்.
சூரா முஃமினூன் வசனம் 1 முதல் 11 வரை.

1. நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டனர்.
2. அவர்கள் எத்தகையவரென்றால் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள்.
3. அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகியிருப்பார்கள்.
4. அவர்கள் ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்.
5. அவர்கள் தங்கள் மர்மஸ்தானத்தை (விபசாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள்.
6. எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலது கரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விஷயத்தில்) அவர்கள் நிந்திக்கப்பட மாட்டார்கள்.
7. இதற்குப் புறம்பானதை எவரேனும் விரும்பினால் அவர்கள் வரம்பு மீறியவர்களாகி (குற்றவாளியுமாகி) விடுவார்கள்.
8. அன்றி, அவர்கள் (தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருளையும், தங்களுடைய வாக்குறுதியையும் பேணி(க் காத்து) நடந்து,
9. தங்கள் தொழுகைகளையும் (காலாகாலத்தில் தவறாது) கடைப்பிடித்து தொழுது வருவார்கள்.
10. இத்தகையவர்தாம் (சுவனபதிக்கு) உண்மையான வாரிசுதாரர்கள்.
11. ஆகவே, இவர்கள் “ஃபிர்தவ்ஸ்” என்னும் சுவனபதியை அனந்தரமாகக் கொண்டு அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
இத்தகைய பண்புநலன்கள் உடையவர்கள்தான் முஃமின்கள் ஆவர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தொழுகை மானகேடான செயல்கள் அனைத்தையும் தடுக்கும்.”
அப்படிப்பட்ட தொழுகை எப்படி இருக்க வேண்டும் என்றால் அது உயிரோட்டமாக இருக்க வேண்டும். தொழுகையாளியின் உள்ளம் அல்லாஹ்வின் இறையச்சத்தை உடைய உள்ளமாக இருக்க வேண்டும். தன்னுடைய தொழுகை படைத்த அல்லாஹ்வுக்காக மட்டும்தான் இருக்க வேண்டும். மாறாக, பிறருக்காக காட்டுவதாக இருத்தல் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் தொழுகையை கொண்டும், பொறுமையை கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்.
மேலும் அந்த தொழுகையை குறித்த நேரத்தில் தொழ வேண்டும். எப்பொழுது போர் நேரங்களிலும் தொழுகை கடமை என்று வஹி வந்ததோ அப்போழுது அனைத்து சஹாபிகளும் இதை கடைப்பிடித்தனர். போர்களத்தில் கூட தொழுகையை விட அனுமதி இல்லாத நிலையில் இன்று நாம் பஜர் தொழுகைக்கு எழாத நிலைதான் வருத்தம்.
வீணான செயல்களில் இருந்து விலகி இருப்பது
எந்த ஒரு முஃமினும் வீணான செயல்களில் ஈடுப்பட மாட்டான். அவன் அவனுடைய நேரம் முழுவதையும் நல்ல விசயத்தில் அமைத்துக் கொள்வான். அவனுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை கூட நன்மையான செயல்களில் பயன்படுத்துவான்.
நபி (ஸல்) அவர்கள் நீங்கள் உங்களுடைய வறுமை வரும் முன் செல்வத்தை பயன்படுத்துங்கள் என்றும், முதுமை வரும் முன் இளமையை பயன்படுத்துங்கள் என்றும், நோய் வரும் முன் ஆரோக்கியத்தை பயன்படுத்துங்கள் என்றும் கூறினார்கள்.
நாளை மறுமையில் நீ உன்னுடைய இளமை காலத்தை எப்படி செலவளித்தாய் என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் சொர்க்கம் போக முடியாது.
இதனை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறுகிறான்:
“உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன. அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும் என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)” [2:214]
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுதல்
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவது பற்றி அல் குர்ஆன் கூறுவது:
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். [2:261]
பெரும்பாவங்களில் இருந்து விலகி இருப்பது
முஃமின்கள் பெரும்பாவங்களில் இருந்து விலகி இருப்பார்கள். அதவது இணைவைப்பது, விபச்சாரம், மது, சூதாட்டம் போன்ற செயல்களை விட்டு விலகி இருப்பார்கள். முஃமின்கள் அல்லாஹ்வை தவிர வேறு எந்த ஒரு படைப்பையும் வணங்கமாட்டார்கள்.
அப்துல்லாஹ் இபுனு ஹுதாஃபா (ரலி) அவர்கள் யமன் நாட்டின் கிருஸ்துவ சிற்றரசரால் கைது செய்யப்படுகிறார். பின் அந்த அரசன் ஹுதாஃபா (ரலி) அவர்களை கிருஸ்துவ மதத்திற்கு மாற சொன்னான். அவர் மறுத்தார். பின் செல்வத்தை தருவதாக கூறினான். அதற்கும் மறுத்தார். பின் கோபம் அடைந்த அரசன் ஹுதாஃபா (ரலி) அவர்களை கொதிக்கும் நீரில் போட்டு கொலை செய்ய முடிவு எடுத்தான்.
அப்போழுது ஹுதாஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“என் உடலில் உள்ள ரோமங்கள் அளவுக்கு எனக்கு உயிரை அல்லாஹ் கொடுத்திருந்தாலும் அதை அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையில் இழப்பேனே தவிர இந்த மார்க்கத்தை விட மாட்டேன்.”
இதுதான் ஈமானின் உறுதி நிலை.
முஃமின்கள் விபச்சாரத்தை விட்டும் விலகி இருப்பர். இதற்கு உதாரணம் நபி யூசுப் (அலை) அவர்கள். தன்னுடைய எஜமானின் மனைவி விபச்சாரதிற்கு அழைத்தப்போது அவர்கள் மறுத்தார்கள். யாரும் இல்லாத நிலையில் நபி யூசுப் (அலை) அவர்கள் நினைத்து இருந்தால் தவறு செய்து இருக்கலாம். அது யாருக்கும் தெரிந்து இருக்காது. ஆனால் அவர்கள் அல்லாஹ்வை பயந்து கொண்டார்கள்.
முஃமின்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தை வாக்களித்துள்ளான். பின் அவர்கள் வெற்றிக்கு சொந்தக்காரர்கள் என்றும் கூறியுள்ளான்.
இதுவரை முஃமின்கள் யார் என்றும் அவர்களுடைய பண்புகளை பற்றியும் படித்தோம். நம்முடைய நிலையை இதனோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வோம்.
“(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால்,எவர் வழிகெடுப்பவற்றை நிராகரித்துஅல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார். அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.” [2:256]

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1