Unknown |
8:32 AM |
0
comments
புதுச்சேரி: மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான சென்டாக் விண்ணப்பங்கள் வரும் 9ம் தேதி முதல் ஆன்-லைனில் வரவேற்கப்படுகிறது.
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில், சுமார் 3,500 இடங்களுக்கு ஆண்டுதோறும் சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தாண்டிற்கான சென்டாக் விண்ணப்பங்கள் வரும் 9ம் தேதி முதல் சென்டாக் இணையதளத்தில் வரவேற்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., பி.டெக்., ஆயுர்வேதம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், பி.எஸ்.சி. நர்சிங்., எம்.எல்.டி., பி.பார்ம் படிப்புகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் விண்ணப்பிக்கலாம்.
கடந்த காலங்களில் தபால் மூலமாகவும், ஆன்-லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. தபாலில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்திருந்தனர். ஆன் லைனில் 800 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். இந்தாண்டு ஜிப்மர் மருத்துவமனையை பின்பற்றி முழுக்க முழுக்க ஆன்-லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தாண்டு தபால் நிலையங்களில் விண்ணப்பங்கள் கிடைக்காது. மற்ற வழிகளில் விண்ணப்பித்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டாது. மாணவர்கள் சேர்க்கை பற்றி தகவல் புத்தகத்தை www.centaconline.in என்ற இணையதள முகவரியில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஆன்-லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து "தி சென்டாக், சென்டாக் அலுவலகம், புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி வளாகம், பிள்ளைச்சாவடி, புதுச்சேரி -605014." என்ற முகவரியில் டி.டி.யுடன் இணைத்து அனுப்ப வேண்டும். டி.டி.,க்கள் "தி கன்வீனர், சென்டாக்" என்ற முகவரியில் புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்ப வேண்டும்.
கட்டண விபரம் ஒரு படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 500 ரூபாய், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் 250 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இரண்டு படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 750 ரூபாய்,(எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 375 ரூபாய்) மூன்று படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆயிரம் ரூபாய் (எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் 500 ரூபாய்) விண்ணப்ப கட்டணமாக டி.டி. எடுத்து அனுப்ப வேண்டும்.
உதாரணமாக பி.டெக். படிப்பிற்கு மட்டும் விண்ணப்பித்தால் 500 ரூபாய் விண்ணப்ப கட்டணமும், பி.டெக். பயாலஜி என இரண்டு படிப்புகளுக்கு விண்ணப்பித்தால் 750 ரூபாயும், பி.டெக். பயாலஜி, பி.பார்ம் படிப்பிற்கு என மூன்றுக்கு விண்ணப்பித்தால் ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.
சென்டாக் இணையதளத்தில் வரும் 31ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 10ம் தேதிக்குள் சென்டாக் அலுவலகத்திற்கு தபாலில் அல்லது கூரியரில் அனுப்ப வேண்டும்.
Category:
உயர் கல்வி,
வேலைவாய்ப்பு
0 comments