டிராவல், சுற்றுலா மேலாண்மை படித்தால் நல்ல வருமானம்!
சுற்றுலா மற்றும் உபசரிப்பு தொழில்துறையில் புதிது புதிதாக ஏற்படும் தேவைகள் மற்றும் சவால்களை திறம்பட சமாளிக்கும் வகையிலான நிபுணர்களை உருவாக்குவது இப்படிப்பின் நோக்கம். ஒருவர் கல்வி நிறுவனப் பணியில் இருந்தாலும் சரி அல்லது நடைமுறை தொழில்துறையில் இருந்தாலும் சரி. அவர்கள் இருவருக்கும் சுற்றுலா மற்றும் உபசரிப்பு துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள எந்த தடையுமில்லை.
* சிறப்பம்சம்:
முதுநிலையில் வழங்கப்படும் டிராவல் மற்றும் சுற்றுலா மேலாண்மை படிப்பின் சிறப்பம்சமே நிஜ தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ற வகையில் இதன் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருப்பது. எனவே, இப்படிப்பை அக்கறையுடனும், கவனத்துடனும் மேற்கொள்ளும் ஒருவர் படித்து முடித்தவுடன் வேலைக்கான முழு தகுதியுடன் வெளிவருவார். இப்படிப்பின் போது, டிராவல் ஏஜென்சிகள், சுற்றுலா இயக்கம், அக்கவுன்டிங், மார்க்கெட்டிங், தொழில் முனைதல், ஓட்டல் மேனேஜ்மென்ட், ஆளுமைத்திறன் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்களை பற்றி படிக்கிறார்கள்.
* சுற்றுலா நிபுணர்கள் செய்வது என்ன?
சுற்றுலா, விடுமுறை, வணிக காரணங்களுக்காக தங்களின் வீடுகளையும், சொந்த ஊர் மற்றும் நாடுகளையும் விட்டு பிரிந்து வரும் மக்களுக்கான சேவைகளை வழங்குவதே இத்தொழிலின் முக்கிய அம்சம். இத்துறையில், ஒருவர் எந்த நிலையில் பணியாற்றினாலும், அவர் மக்களோடு நேரடியாக தொடர்பு கொள்கிறவராக இருக்கிறார் என்பது முக்கிய அம்சம்.
டிராவல் ஏஜெண்டுகள், சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை மதிப்பிட்டு, திருப்திபடும் வகையிலான சிறந்த ஏற்பாட்டை செய்வது அவர்களின் கடமை. டிராவல்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் தற்போதைய விதிமுறைகளைப் பற்றிய விஷயங்களை மனதில் ஏற்றிக் கொள்வதுடன், கார்கோ, டிக்கெட்டிங், பாஸ்போர்ட், விசா ஆகியவற்றுக்கு தேவையான ஆவணங்களை பற்றி தெரிந்து வைத்து, தங்களை நாடிவரும் வாடிக்கையாளர்களுக்கு சரியான ஆலோசனைகளை வழங்குவது இவரின் கடமை.
மேலும், தேவைப்படும் இடத்தில் 'பேப்பர் ஒர்க்' சம்பந்தமான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். மேலும், சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லக்கூடிய இடங்களைப் பற்றி பலவிதமான விஷயங்களை நன்றாக தெரிந்து வைத்திருப்பதோடு, அந்த இடத்தை, சாலை வழி, ரயில் வழி, நீர்வழி, வான்வழி ஆகியவற்றின் மூலம் எப்படி அடைவது என்பதை பற்றியும் தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.
* வெற்றிக்கு வழி:
இத்துறையைப் பற்றி பேசும் பலபேர், தாங்கள் பலரிடமும் சென்று கலந்துரையாட விரும்புபவர்கள் என்று சொல்வார்கள். இவ்வாறு நினைத்து பார்ப்பதற்கு எளிதாகத் தான் இருக்கும். ஆனால், நடைமுறையில் நாம் அந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது கூச்சமாகவும், தயக்கமாகவும் உணர்வோம். ஆனால், அந்த பண்பு தான் முக்கியமானது. முதலில், விருந்தினர்களுக்கு வாழ்த்து சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும். மேலும், அவர்களை குறையின்றி உபசரிக்கும் தன்மையையும், ஆர்வத்தையும் இயல்பாகவே பெற்றிருக்க வேண்டும். எந்த ஒரு நாடாக இருந்தாலும் சுற்றுலா மற்றும் உபசரிப்பு துறையானது, அதிக வருமானம் தரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. அத்துறை தனக்குள் ஏராளமான வேலைவாய்ப்புகளை கொண்டுள்ளது.
* இப்படிப்பு தொடர்பான இதர படிப்புகள்:
எம்பிஏ இன் ஓட்டல் ஹாஸ்பிடாலிட்டி அண்ட் டூரிசம் அட்மினிஸ்ட்ரேஷன் அட் எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட், மைலாபூர் - சென்னை, மாஸ்டர் ஆப் டூரிசம் அட்மினிஸ்ட்ரேஷன் - க்ரிஸ்ட் யுனிவர்சிட்டி, எம்ஏ டூரிசம் அட்மினிஸ்ட்ரேஷன் - அமிட்டி யுனிவர்சிட்டி.
* வேலை வாய்ப்பை வழங்கும் சில முக்கிய நிறுவனங்கள்:
டிராவல் ஏஜென்சீஸ், டூர் ஆபரேட்டர்ஸ், ஈவென்ட் மேனேஜ்மென்ட் பேர்ம்ஸ், கவர்மென்ட் ஆர்கனைசேசன்ஸ், இம்மிகிரேஷன் அன்ட் கஷ்டம்ஸ் சர்வீஸ், டூரிசம் ப்ரொமோசன் அன்ட் சேல்ஸ் பேர்ம்ஸ், ஓட்டல்கள், ரிசார்ட்ஸ், ஏர்லைன்ஸ், அகாடமிக் இன்ஸ்டிடியூஷன்ஸ் என பல இடங்களில் இத்துறைக்கு வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளன.
Category: மாணவர் பகுதி
0 comments