பொறியியல் மோகம் மாணவர்களிடையே குறைய காரணமென்ன?
பொறியியல் கல்வி தொடர்பாக சமீபத்தில் வெளியாகியிருக்கும் சில செய்திகள் நம்முடைய மோசமான அடிப்படைக் கல்வி, அதன் ஆழமின்மை ஆகியவற்றை வெளிப்படுத்தியிருக்கின்றன. தமிழகத்தில் கடந்த பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 7.45 லட்சம். பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்கள் 2.06 லட்சம். இந்த இடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் 1.74 லட்சம். மாற்றுத்திறனாளிகளுக்கான 6000 இடங்களுக்கு விண்ணப்பித்தோர் 400 பேர். தமிழகத்தில் உள்ள 578 பொறியியல் கல்லூரிகளில் கடந்த தேர்வில் 333 கல்லூரிகளில் மாணவர்களின் தேர்ச்சி 50 சதவீதத்துக்கும் குறைவு. தனியார் பொறியியல் கல்லூரிகள் சார்பில், அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்க வேண்டும். இல்லையேல், கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் அனைத்தும் மாணவர்களிடையே பொறியியல் கல்வி செல்வாக்கு இழந்து வருவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உண்மையில் பொறியியல் கல்விக்கு எதிர்காலம் இல்லையா?
ஒரு காலத்தில் கெளரவமானதாக, அதிகாரம் மிக்கதாக, பணம் காய்க்கும் தொழிலுக்கு உகந்ததாக கருதப்பட்ட பொறியியல் கல்வியை, கடந்த ஆண்டில் தேர்ச்சி பெற்ற ஏழரை லட்சம் பிளஸ் 2 மாணவர்களில் 2.05 லட்சம் பேர்கூட தேர்ந்தெடுக்க முன்வராதது ஏன்? பொறியியல் கல்வியில் தனியார் கல்லூரிகள் பெருகிய பிறகு அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு இதில் பயிலும் வாய்ப்பு கிடைத்தது. குறைந்த மதிப்பெண் பெற்றாலும், ஆர்வ மிகுதியால் கடன், கல்விக்கடன் என பல வகைகளிலும் முயன்று சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள், கல்வியை முடித்த பிறகு கடனுக்கான வட்டியை செலுத்தும் அளவுக்குக்கூட வேலை பெற முடியவில்லை. மேலும், பொறியியல் கல்வியில் இடம்பிடிக்க மதிப்பெண்ணை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு புரிதல் இல்லாமல் படிப்பதால் அம் மாணவர்கள், உயர்கல்வி திட்டத்தில் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர்.
இதனால், அதில் வெற்றி பெற முடியாமலோ அல்லது குறைந்த மதிப்பெண்ணால் வேலை போட்டிக்கான இடத்தை நெருங்கமுடியாமல் போவதாலோ பொறியியல் கல்வி சிரமம் என்று முடிவெடுக்கின்றனர். உலகளாவிய வேலைவாய்ப்பு இருந்தாலும், பெரும்பான்மையானோர் உள்ளூரிலேயே ஏதோ ஒரு வேலையை தேடுவது. இதனால், நிலையான வேலை, நிலையான வருமானம் இல்லாமல் போவதால் பயின்ற கல்வியை குறைகூறுவது. சுயவேலைவாய்ப்புக்கு உதவ அரசு முன்வந்தாலும், ரிஸ்க் எடுக்கத் தயங்குவது போன்றவை இன்றைய மாணவர்கள் பொறியியல் கல்வியிலிருந்து திசைதிரும்பியதற்கு காரணங்களாகக் கருதப்படுகின்றன
பொதுவாக, பொறியியல் கல்வி மீது தற்போது எதிர்மறையான எண்ணங்கள் ஏற்பட்டு வருகிறது. எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி என்பது போல, எளிதாக பட்டம் பெறுவது எப்படி என்ற எண்ணங்களும் சேர்ந்தே பொறியியல் கல்வியில் மாணவர்கள் சேர்வதில் தேக்க நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதார ரீதியாக பிரச்னை உள்ள மாணவர்கள், பொறியியல் கல்வியில் சேருவதை தவிர்த்து, தற்போது கல்வி ஆலோசகர்கள் மூலமாக தங்களுக்கு ஏற்ற மாற்று கல்வித் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து சேர்ந்துவிடுகின்றனர். இதன்மூலம், நல்ல வேலைவாய்ப்பையும், வருவாயையும் பெற்ற வருகின்றனர்.
இதுவும் பொறியியல் மோகம் மாணவர்களிடையே குறைய ஒரு காரணம். இன்றைய நிலையில், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேருவதற்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. நகரங்களில் மட்டுமே நடைபெறும் இந்த நிகழ்ச்சிகள் கிராமப்புறங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளி மாணவர்களை எட்டுவதில்லை. அவர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு கிடைக்க அரசு தொடக்கத்திலேயே திட்டமிட வேண்டும்.
ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி உளவியலாளர் பணியிடத்தை ஏற்படுத்தி அதில் ஒரு பேராசிரியரை நியமிக்க வேண்டும். அவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம், சட்டம், கலை உள்ளிட்ட உயர்கல்வி பாடத் திட்டங்கள் குறித்தும், அவற்றைக் கற்பதற்குத் தேவையான அடிப்படைத் தகுதி, முன்தயாரிப்பு போன்றவை குறித்தும் ஆண்டு தொடக்கத்திலிருந்தே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு மாணவர்களை முன்கூட்டியே விழிப்படையச் செய்வதன் மூலம் அவர்கள் உரிய தகுதியோடு அச்சமின்றி உயர்கல்வியை எதிர்கொள்ள வழி ஏற்படும்
இரா. மகாதேவன்
Category: மாணவர் பகுதி
0 comments