வி.களத்தூருக்கு அமைக்கப்பட்டு வரும் காவேரி (கொள்ளிடம்) கூட்டுகுடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தரேஸ் அஹமது ஆய்வு செய்தார்!
பெரம்பலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் நேற்று (08.07.2014) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் விபரம் பின்வருமாறு:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 306 குடியிருப்புகள் மற்றும் அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்க ரூ ரூ.61.11 கோடி மதிப்பீட்டில் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் செங்கரையூர் அருகில் கொள்ளிடம் ஆற்றில் நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து மின் மோட்டார் மூலம் சுமார் 539.45 கி.மீ நீளத்திற்கு பல்வேறு அளவுள்ள குழாயின் மூலம் நீர் உந்தப்பட்டு வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 40 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளில் சேகரித்து 306 குடியிருப்புகள் மற்றும் 2 பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அன்னமங்களம் பிரிவு சாலை அருகே ஆத்தூர் - பெரம்பலூர் சாலையின் குறுக்கே குடிநீர் குழாய் அமைக்கும் பணி மற்றும் வேப்பந்தட்டை ஏ.களத்தூர் சாலை குறுக்கே குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்..தரேஸ்அஹமது இ.ஆ.ப., அவர்கள் (08.07.2014) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கூட்டுகுடிநீர் திட்டப்பணிகளை விரைவாக முடிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 306 குடியிருப்புகள் மற்றும் அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையம், 40 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள், மின்மோட்டார் அறை அமைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. நீரேற்று குழாய், நீர் உந்துகுழாய் மற்றும் பிரிவு நீரேற்று குழாய்கள் மொத்தமுள்ள 539.90 கி.மீ தூரத்தில் 471.20 கி.மீ அளவிராள பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள பணிகள் நடைபெற்றுவருகிறது. மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் 18-க்கு 17 முடிக்கப்பட்டுள்ளது. தற்போது கூட்டு குடிநீர் திட்டத்தி;ன் மூலம் செங்கரையூர் தலைமை நீர் ஏற்று நிலையத்திலிருந்து தாப்பாய், நாரணமங்கலம், ஆலம்பாடி தரைமட்ட தொட்டிகள் வழியாக வேப்பந்தட்டை தரைமட்ட தொட்டி வரை குடிநீர் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் தற்போது ஆலத்தூர், பெரம்பலூர், ஒன்றியங்களை சார்ந்த 49 குடியிருப்புகளுக்கு சோதனை முறையில் இத்திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் ந.சந்திரசேகரன், செயற்பொறியாளர் பு.அன்பழகன், உதவி செயற்பொறியாளர் மு.பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments