Unknown |
10:12 PM |
0
comments
இமாசலப் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தின் மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை வாக்களித்தார் 97 வயது சியாம் சரண் நேகி. இந்தத் தேர்தலில் இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடியோ ராகுல் காந்தியோ அர்விந்த் கேஜ்ரிவாலோ கதாநாயகன் அல்ல. நேகிதான். காரணம் சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தல் முதல் ஒன்றுவிடாமல் தவறாமல் வாக்களித்து வருகிறார் நேகி.
ஜனநாயகத்தின் உண்மை யான மன்னர்கள் மக்கள்தான் என்பதை நிரூபிக்கும் கோடானுகோடி இந்தியர்களில் நேகி முதன்மையானவர். தான் வசிக்கும் கல்பா என்ற இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வாக்குச் சாவடிக்கு வந்தபோது அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. வெண்ணிற முடியும் சுருக்கம் விழுந்த சருமங்களும் இந்திய வாக்காளர்களில் அவர்தான் பீஷ்ம பிதாமகர் என்பதைச் சொல்லாமல் சொல்லின. உடன் அவருடைய 87 வயது மனைவி ஹிரா மணியும் வந்தார்.
இமாசல மாநிலத்துக்கே உரிய பாரம்பரிய தொப்பி அணிந்திருந்த நேகி வாக்களித்துவிட்டு மை தோய்ந்த கையை தொலைக்காட்சி கேமராக்களுக்குக் காட்டினார்.
அதிகம் கேள்விப்பட்டிராத ஒரு கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக்கூட ஆசிரியர் நேகி, நவ இந்தியாவை உருவாக்கும் சிற்பிகளில் ஒருவரானதுதான் சுதந்திர இந்தியாவின் வரலாறு.
1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கடுமையான குளிரில் பாதையெல்லாம் பனிபெய்து மூடியிருக்க நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் முதல் வாக்காளராக வாக்களித்தவர்தான் சியாம் சரண் நேகி. அப்போது அவருக்கு வயது 34. 1952 பொதுத் தேர்தல் முதல் கட்டமாக 1951-லேயே இமாசலத்தில் தொடங்கியது. பிற மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது இமாசலத்தில் கடும் குளிர்காலமாக இருக்கும் என்பதாலும் அது வேட்பாளர் களுக்கும் வாக்குச்சாவடி அதிகாரி களுக்கும் பெரிய இடை யூறாக இருக்கும் என்பதாலும் தேர்தல் அங்கு முன்கூட்டியே நடந்தது.
அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நாளை நேகி மறக்கவில்லை. சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் முதல் வாக்காளராக வாக்கைப் பதிவுசெய்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியும் பெருமையும் கர்வமும் நேகிக்கு ஏற்பட்டது. அதை இப்போதும் அவருடைய முகத்தில் பார்க்க முடிகிறது.
ஜனநாயகத்தில் உறுதியான நம்பிக்கையுள்ள நேகி, ஒரு தேர்தலிலும் வாக்களிக்காமல் இருந்ததில்லை. வயோதிகம் வளைத்துவிட்ட முதுகை, வாலிப உற்சாகத்தோடு நிமிர்த்தி, கையில் கோலுடன் நடந்து வருகிறார் நேகி. "மழையோ, பனியோ எது வந்தாலும் வாக்களிக்கத் தவறி யதே இல்லை" என்று கூறுகிறார்.
வாக்குச் சாவடிக்கு காலை யிலேயே வந்த வாக்காளர்களில் நேகியும் அவருடைய மனைவியும் ஒருவர். வாக்களித்த பிறகு நிருபர் களைச் சந்தித்த நேகி, "இந்த முறை யும் தவறாமல் என்னுடைய மதிப்பு மிக்க வாக்கைச் செலுத்தி விட்டேன்" என்று அறிவித்தார்.
Category:
உயர் கல்வி,
கல்வி,
மாநில செய்தி,
மாவட்ட செய்தி
0 comments