விமான நிலையத்தில் கடந்த 5 மாதங்களில் ரூ.470 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்!
முதலீடு செய்வதில் மக்கள் பல்வேறு வகையான முதலீடுகளை தேர்வு செய்து அவற்றில் தங்களின் வருமானத்தின் ஒரு பகுதியை முதலீடு செய்து சேமித்து வருகின்றனர். இதில் ஏழை, எளிய, சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் விரும்பி முதலீடு செய்வதும், அது பாதுகாப்பானது என்றும் கருதி முதலீடு செய்வது என்பது தங்கத்தில்தான்.அந்த வகையில் ஆபரண தங்க நகைகளை வாங்குவதில் இந்த வகையினர் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் தொடங்கி ஆகஸ்டு வரையிலான 5 மாத காலகட்டத்தில் விமான நிலையத்தில் ரூ.470 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுங்கத்துறையினர் 1,780 வழக்குகளை தாக்கல் செய்திருப்பதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக வட்டாரங்கள் கூறுகின்றன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், வழக்குகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது.
2013-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் தங்க கடத்தல் தொடர்பாக 550 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் ரூ.153 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.தங்கத்திற்கு பெருகி வரும் கிராக்கியை சமாளிக்க, கடத்தல்காரர்கள் தங்க கடத்தலில் புதிய வழிமுறைகளை பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக கடத்தல்காரர்கள் கடல் மார்க்கத்தையும் தங்க கடத்தலில் இருந்து விட்டு வைக்கவில்லை. குளிர்பான பாட்டில்களுக்கு மத்தியில் வைத்து கடத்தி வந்த தங்கம், குஜராத் துறைமுகம் ஒன்றில் கைப்பற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்த முயற்சிக்கிற வேளையில், தங்கத்தின் தேவை பெருகி வருவது மத்திய நிதி அமைச்சகத்துக்கு கவலை அளிப்பதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Category: மாநில செய்தி
0 comments