மாதிரி ஆளில்லா விமானம் தஞ்சை மாணவர்கள் தயாரிப்பு!
தஞ்சை: தஞ்சை அருகே வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சிறிய வடிவிலான மாதிரி ஆளில்லா விமானத்தை மாணவர்கள் தயாரித்து பறக்க செய்தனர். ரூக்கி ரிவெர்ட் டெக்னாலஜிஸ், பின்லேன்ட் ஆய்வகம், இந்திய தொழில்நுட்ப கழகம் சார்பில் தேசிய கோடைக்கால உள்ளக பயிற்சி முகாம் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலை.யில் நடந்தது. இதில், மாதிரி ஆளில்லா விமானச் செய்முறைப் பயிற்சி கற்பிக்கப்பட்டன. இப்பல்கலை.யின் வான் பொறியியல் துறையைச் சேர்ந்த 48 மாணவ, மாணவிகள், 12 குழுக்களாக சேர்ந்து ஆளில்லா விமானங்களை தயாரித்தன. விமானங்களை நேற்று மாணவர்கள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இணை துணைவேந்தர் தவமணி, பதிவாளர் அசோக்குமார் முன்னிலையில் பறக்கவிட்டனர்.
மாணவர் ரெக்ஸ்அமலன் கூறும்போது, ‘20 நாள் பெற்ற பயிற்சி மூலம் குவாட்காப்டர் என்ற ஆளில்லா விமான மாதிரியைத் தயாரித்து பறக்கவிட்டோம். அடுத்ததாக இந்த மாதிரி விமானத்தில் பாராசூட் அமைத்து இயக்க திட்டமிட்டுள் ளோம்‘ என்றார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முத்துராமன் கூறும்போது, ‘ஹெலிகாப்டரில் 2 இறக்கைகள் மட்டும் இருக்கும். ஆனால் குவாட்காப்டரில் 4 புறமும் இறக்கைகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆளில்லா விமானத்தை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கலாம். இம்மாதிரி விமானங்களை விதை தூவ, உரம் தெளிக்க என விவசாய பணிகளுக்கு பயன்படுத்தலாம். இதில் கேமராக்களை பொருத்தி உயரமான இடத்திலிருந்து காட்சிகளைப் பதிவு செய்யவும் முடியும்‘ என்றார். -
Category: மாணவர் பகுதி
0 comments