தங்கத்தை தூளாக்கி "மசாலா பொடி" என்று கடத்த முயன்றவர் சென்னை விமான நிலையத்தில் கைது!
வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை, ஷுவில், வாட்சில், ரொட்டியில் மறைத்து எல்லாம் கடத்த முயன்றவர்கள் பிடிபட்ட செய்தியை நாம் கேட்டிருப்போம்.
ஆனால், நவீன யுகத்துக்கு ஏற்ப 'ரூம் போட்டு யோசித்து' தங்கத்தை தூளாக்கி, மசாலா பொடியுடன் கலந்து கடத்த முயன்ற பலே ஆசாமியை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து இன்று சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பாபு என்ற நபரின் உடைமைகளை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள், ஒரு பாக்கெட்டை சுட்டிக் காட்டி, அதில் என்ன உள்ளது? என்று கேட்டனர்.
மசாலா பொடி உள்ளதாக பாபு கூறியதையடுத்து, சந்தேகப்பட்ட அதிகாரிகள் அதை திறந்து, கொட்டிப் பார்த்த போது ஒரு கிலோ மசாலா பொடியுடன் ஒரு கிலோ தங்கத்தை தூளாக்கி கலந்து கடத்த முயன்றிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தூளின் மதிப்பு சுமார் 35 லட்சம் ரூபாய் என தெரிவித்தனர்.
Category: மாநில செய்தி
0 comments