பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தானியங்கி A.T.M. மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திரா உத்தரவு!
பெரம்பலூர் மாவட்டத்தில் தானியங்கி ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
ஆலோசனை கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கி தானியங்கி பணம் எடுக்கும் (ஏ.டி.எம்.) மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து வங்கி அதிகாரிகள், போலீஸ் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா தலைமை தாங்கினார். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் சூப்பிரண்டு சந்திரசேகரன், துணை சூப்பிரண்டுகள் சந்தானபாண்டியன்(மாவட்ட குற்றபிரிவு), சுருளியாண்டி (பெரம்பலூர்), கோவிந்தராஜ் (மங்கலமேடு) மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அனைத்து வங்கிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திரா பேசியதாவது:-
காமிரா பொருத்தப்பட வேண்டும்
இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு 3 மாதங்களில் ஏ.டி.எம். மையங்களில் நடைமுறைப்படுத்த வேண்டியவை குறித்து பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு டி.ஜி.பி. அறிவுறுத்தியவற்றை செயல்படுத்திட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் ஏ.டி.எம். மையங்களை நிறுவி உள்ள வங்கிகள் ஏ.டி.எம். அறை வெளியே இருந்து பார்க்கும்போது உள்ளே தெளிவாக காணும் வகையிலும், அதன் பிம்பம் தெளிவாக பொருத்தப்பட்டுள்ள காமிராவில் பதியும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அனைத்து ஏ.டி.எம். மையங்களும் 24 மணிநேர பாதுகாவலர்கள் அல்லது எலக்ட்ரானிக் கருவியால் கண்காணிக்கப்பட வேண்டும். வீடியோ கண்காணிப்பு அல்லது எலக்ட்ரானிக் கண்காணிப்பு கருவி அசம்பாவிதம் நிகழும் போது அதிர்வுறுதல் மூலம், ஆபத்து காலத்தில் விரைவாக செயல்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பாதுகாவலர் இல்லாத ஏ.டி.எம். மையங்களில் அபாய சங்குகள் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
இரவு நேரத்தில் பணபரிவர்த்தனை
மிக அதிக ஆபத்தான பகுதிகள் மற்றும் குறைவான பண பரிவர்த்தனைகள் உள்ள ஏ.டி.எம். மையங்களில் இரவு நேரத்தில் பணபரிவர்த்தனையை நிறுத்தி வைக்க வங்கிகள் முயற்சி செய்திட வேண்டும். மேலும் போலீஸ் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்திடவும், குறைகளை நிவர்த்தி செய்திடவும் வங்கி நிர்வாகங்கள் ஒத்துழைப்பு தந்திடவேண்டும். கொள்ளை நடைபெறும் இடமாக கருதக்கூடிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், தங்க நகை அடகு பிடிக்கும் கடைகள், நிதிநிறுவனங்கள் ஆகியவற்றை கணக்கெடுத்து இரவு நேரத்தில் அதிகப்படியான பாதுகாப்பு ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Category: மாவட்ட செய்தி
0 comments