தமிழகத்தில் மின் தடைக்கான காரணம் என்ன? வாரியத்திடம் விளக்கம் கேட்கும் அரசு!
ஜூன் முதல் மின் தடை இருக்காது' என்ற, அரசு உத்தரவுக்கு மாறாக, பல இடங்களில், மீண்டும் மின் தடை செய்யப்படுகிறது. இதற்கான காரணம் மற்றும் தீர்வை கூறும்படி, மின் வாரிய அதிகாரிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில், கடந்த, 2008 முதல், மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், குடியிருப்புகளுக்கு, காலை, 8:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, சுழற்சி முறையில் மின் தடை செய்யப்பட்டது. தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களில், மின்சாரம் பயன்படுத்த, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.குடியிருப்புகளுக்கு, மின் தடை செய்யும் நேரம், மாதம்தோறும், மின் வாரியம் சார்பில், பத்திரிகைகள் வாயிலாக, முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டது.இதனால், பொது மக்கள், சமையல், சலவை உள்ளிட்ட தங்களின் அன்றாட பணிகளை, முன்கூட்டியே திட்டமிட்டு செய்ததால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
தற்போது, வட சென்னை, வல்லூர், மேட்டூர் விரிவாக்க புதிய அனல் மின் நிலையம்; கூடங்குளம் அணுமின் நிலையம்; காற்றாலைகள் ஆகியவற்றின் மூலம், கடந்த ஆண்டை விட, கூடுதல் மின்சாரம் கிடைக்கிறது.இதையடுத்து, 'ஜூன், 1ம் தேதி முதல், மின் தடை ரத்து செய்யப்படும்' என, தமிழக அரசு, அறிவித்தது.இந்த அறிவிப்பு வெளியானது முதல், சென்னை உள்ளிட்ட பல இடங்களில், ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை தொடர்ந்து, மின் தடை செய்யப்படுகிறது. அறிவிக்கப்படாத, குறிப்பாக இரவு நேர மின் தடையால், பொதுமக்கள், வர்த்தகர்கள் என, அனைத்து தரப்பினரும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து, மின் தடைக்கான காரணம்; அவற்றிற்கு தீர்வை கூறும்படி, மின் வாரிய அதிகாரிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த மாதம், 30ம் தேதியுடன், கோடை வெயில் தாக்கம் குறையும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெயில் குறையாததால், தொடர்ந்து, மின் தேவை அதிகரித்து வருகிறது.மின் உற்பத்தி நன்கு உள்ள நிலையில், மின் வினியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளால் தான், மின் தடை செய்யப்படுகிறது. விரைவில், இந்த பிரச்னைக்கு, தீர்வு காணப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Category: மாநில செய்தி
0 comments