பெரம்பலூர் நகரில் புதிய இருவழிச்சாலை பணிகள் நிறைவு பெற்றன!
பெரம்பலூரில் போக்குவரத்து நெரிசலை குறைத்திட ரூ.3 கோடியில் அமைக்கப்பட்ட புதிய இருவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
பெரம்பலூரில், அதிகரித்து வரும் மக்கள் தொகை, அபரிமிதமாக பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக காமராஜர் வளைவு-எளம்பலூர் பிரதான சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எளம்பலூர் சாலையில் 7-வது வார்டு பகுதியில் முத்துநகர், கம்பன் நகர் வழியாக எளம்பலூர் சாலை-விளாமுத்தூர் பிரிவு சாலையை இணைக்கும் தந்தை ரோவர் நூற்றாண்டு வளைவு வரையிலான பிரதான சாலை தற்போது மாற்று வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரூ.3 கோடியில் இரு வழிச்சாலைகள்
தினந்தோறும் ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்லும் இந்த சாலையை விரிவாக்கம் செய்து இருவழிச்சாலையாக மேம்படுத்திட தமிழக அரசிடம் மாவட்ட கலெக்டர் வாயிலாக ரூ.1 கோடியே 90 லட்சம் நிதிஒதுக்கீடு பெறப்பட்டு 1200 மீட்டர் தூரத்திற்கு 14 மீட்டர் அகலத்திற்கு புதிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 17-ந் தேதி தொடங்கப்பட்ட இந்த சாலைப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. ஒப்பந்த வேலை காலம் 30 மாதமாக கொடுக்கப்பட்டிருந்தாலும், 6 மாதங்களில் இந்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்கள், வாகனங்கள் பயன்பாட்டிற்காக முறைப்படி திறந்து விடப்பட உள்ளது.
இதேபோல துறையூர் சாலையை பெரம்பலூர் டவுன் பஸ் நிலையத்துடன் இணைக்கும் திருநகர் இருவழிச்சாலை(475 மீட்டர்) பணிகள் ரூ.1 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனால் துறையூர், நாமக்கல், கரூர் பகுதிகளில் இருந்து பெரம்பலூர் வரும் பஸ்கள், இலகுரக வாகனங்கள் இந்த இருவழிச்சாலை வழியாக டவுன் பஸ் நிலையத்திற்கு போக்குவரத்து நெரிசல் இன்றி ஓரிரு நிமிடத்தில் வந்தடைய முடியும்.
Category: மாவட்ட செய்தி
0 comments