ஆசியாவில் 100 சிறந்த பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் 10 கல்வி நிறுவனங்கள்!
![]() |
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம். |
ஜூன் 20-
ஆசியாவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா அதிவேகமாக முன்னேறி வருகிறது. ஆசியாவின் 100 தலைசிறந்த பல்கலைக்கழகங்களை 'தி' என்றழைக்கப்படுகிற 'தி டைம்ஸ் ஹையர் எஜூகேசன்' பத்திரிகை தயாரித்து வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் 10 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.
100 பல்கலைக்கழகங்களின் வரிசையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் படித்த பஞ்சாப் பல்கலைக்கழகம் 32-வது இடத்தைப் பெற்றிருக்கிறது.
காரக்பூர் ஐ.ஐ.டி., 45-வது இடத்தையும், ஐ.ஐ.டி. கான்பூர் 55-வது இடத்தையும் கைப்பற்றி இருக்கின்றன.
டெல்லி ஐ.ஐ.டி.யும், ரூர்கே ஐ.ஐ.டி.யும் 59-வது இடத்தை பகிர்ந்துகொள்கின்றன. கவுகாத்தி ஐ.ஐ.டிக்கு 74-வது இடமும், சென்னை ஐ.ஐ.டி.க்கு 76-வது இடமும் கிடைத்துள்ளன. சென்னை ஐ.ஐ.டி.யுடன் 76-வது இடத்தை கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும் பகிர்ந்துகொள்கிறது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு 80-வது இடம், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு 90-வது இடமும் கிடைத்துள்ளது.
இது குறித்து பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ள பத்திரிகை ஆசிரியர் பில் பேட்டி, "இந்தியாவின் 10 கல்வி நிறுவனங்கள் ஆசியாவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இந்த கவுரவமான தகுதிநிலை கிடைத்திருப்பது இந்தியாவுக்கு நல்ல செய்தி ஆகும். இது இந்தியாவுக்கு கிடைத்துள்ள அதிரடி முன்னேற்றம்" என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் இந்தப் பட்டியலில் இந்தியாவில் இருந்து வெறும் 3 கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம் பிடித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Category: மாணவர் பகுதி
0 comments