மீண்டும் ஒரு புலி பயங்கரம்... டெல்லியைத் தொடர்ந்து உ.பியில் புலியிடம் சிக்கி இறந்த சிறுவன்!
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் 10 வயது சிறுவனை புலி ஒன்று கடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம் மாநிலம் பிஞ்னோர் மாவட்டத்தில் வனப் பகுதியை ஒட்டி குடியிறுப்புப் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில், இன்று காலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான் 10 வயது சிறுவன் ஒருவன். அப்போது வனப் பகுதியில் இருந்து ஓடி வந்த புலி ஒன்று அச்சிறுவனைக் கடித்துள்ளது. இதில், அச்சிறுவன் பலத்த காயமடைந்தான். அதற்குள்ளாக சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், கம்பு மற்றும் கல் கொண்டு அப்புலியை விரட்டினர். இதனால், தாக்குதலுக்குப் பயந்து அச்சிறுவனை விட்டு விட்டு காட்டுக்குள் ஓடிச் சென்று மறைந்தது அப்புலி. ஆனால், அதற்குள்ளாக அதிக இரத்தப் போக்கினால் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லி உயிரியல் பூங்காவில் மாணவர் ஒருவரை வெள்ளைப் புலி கடித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புலியிடம் சிக்கி இன்னொரு உயிர் பறி போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Category: மாநில செய்தி
0 comments