கைவிட்டது காற்றாலை !தலைதூக்கியது மீண்டும் மின்வெட்டு:ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது பற்றாக்குறை !
சென்னை: சீசனுக்கு முன்பே காற்றாலை கைவிட்ட நிலையில், மீண்டும் தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் 2 முதல் 4 மணி நேரம் வரை மின்வெட்டு தொடர்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் எண்ணூர், தூத்துக்குடி, வடசென்னை, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் அனல் மின்நிலையங்கள் அமைத்து மின்உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் மத்திய தொகுப்பு, காற்றாலை, நீர்மின்நிலையங்கள், எரிவாயு உள்ளிட்டவை மூலம் மின்சாரம் பெறப்படுகிறது. தமிழகத்தில் மின் நுகர்வோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததால் 2004-05ல் ஒரு சதவீதமாக இருந்த பற்றாக்குறை 2011-12ல் 11 சதவீதமாக உயர்ந்தது. கடந்த ஆண்டில் உற்பத்தி திறன் கூடிய பின்பும், மின் பற்றாக்குறை உள்ளதற்கு காரணம் நிலக்கரியை எரிபொருளாக கொண்டு இயக்கப்படும் பல மின் நிலையங்களில் அடிக்கடி இயந்திர கோளாறு ஏற்படுவது மட்டுமல்லாமல் அவைகள் 55 சதவீதத்துக்கும் குறைவாகவே மின் உற்பத்தி செய்வதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவக் காற்று காலம் துவங்கியதை அடுத்து, காற்றாலைகளின் மின் உற்பத்தியை கவனத்தில் கொண்டு, தமிழகத்தில் இனி மின் வெட்டு இருக்காது என்றும், தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்படுவதாகவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு இல்லாமல் இருந்தது. இந்நிலையில், காற்றாலை சீசன் முடிவதற்குள்ளாகவே காற்றின் வேகம் குறைந்ததால், எதிர்பார்த்த அளவு மின் உற்பத்தி நடைபெறவில்லை. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காற்றாலை மின் உற்பத்தி இரண்டு இலக்க எண்களை தாண்டுவதே பெரும் பாடாக உள்ளது. மேலும் தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை ஆகிய அனல்மின்நிலையங்களில் தலா ஒரு யூனிட்டுகளில் ஆண்டு பராமரிப்புக்காக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாலும், மத்திய தொகுப்பிலிருந்து போதிய அளவு மின்சாரம் பெற முடியாததாலும், பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் 2 முதல் 4 மணி நேரம் மின்வெட்டு நீடிப்பதாகவும், இதர மாவட்டங்களில் 6 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்பட பல பகுதிகளில் இரவு நேரங்களில் கூட திடீர் மின் வெட்டு ஏற்படுகிறது. தற்போதைய மின்தேவை 12,704 மெகா வாட்டாக உள்ளது. 1,785 மெகாவாட் பற்றாக்குறை உள்ளது.
Category: மாநில செய்தி
0 comments