புதிய ரயில்வே திட்டங்களில் பாதி செலவை மாநில அரசு ஏற்க வேண்டும்: ரயில்வே அமைச்சர் அறிவிப்பு!
புதுடில்லி: ''திட்டங்களை நிறைவேற்ற புதிய விதிமுறையை பின்பற்ற ஆலோசிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டங்களுக்கான செலவில் பாதியை, மாநில அரசுகள் ஏற்பதோடு, திட்டங்களுக்கான நிலங்களையும் இலவசமாக வழங்க வேண்டும் என, வலியுறுத்தவுள்ளோம்,'' என, ரயில்வே அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா அளித்துள்ள பேட்டி: இதற்கு முன் ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்கள், திட்டங்களுக்கான செலவையும், அவற்றை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்னைகள் பற்றியும் கவலைப்படாமல், ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளனர்.
செலவு அதிகம்: இதனால், 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன.ரயில்வேக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை தான், வருவாய் கிடைக்கிறது. வரவை விட செலவு அதிகமாக உள்ளது. இதனால், புதிய திட்டங்களை அறிவிக்கும்போது, அதற்கான சில புதிய விதிமுறைகளை பின்பற்றலாம் என்ற கருத்து உள்ளது. திட்டங்களுக்கான செலவில் பாதியை, அந்தந்த மாநில அரசுகள் ஏற்பதோடு, திட்டங்களுக்கான நிலங்களையும் இலவசமாக வழங்க வேண்டும். கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுடன், இது தொடர்பாக ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களின் முதல்வர்களும் இந்த நடைமுறையை பின்பற்றக் கோரி, கடிதம் எழுதியுள்ளேன். ஒடிசா, கோவா மாநில முதல்வர்களை சந்தித்தபோது, இதுகுறித்து அவர்களிடம் வலியுறுத்தி உள்ளேன்.
சிறப்பான சேவை: பயணிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, சிறப்பான சேவை அளிப்பது, ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது ஆகிய விஷயங்களுக்கு, இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும். தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், பயணிகள் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிதி அமைச்சரிடமும் இதுகுறித்து ஆலோசனை நடத்த உள்ளேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Category: மாநில செய்தி
0 comments