குறைந்த மின் அழுத்தம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் தாமதம்: பயணிகள் அவதி!
சென்னை விமான நிலையத்தில் திடீரென குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டதால் 8 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக பயணிகள் அவதிப்பட்டனர்.குறைந்த மின் அழுத்தத்தால் அவதி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு திடீரென மின் தடை ஏற்பட்டது.
பின்னர் சிறிது நேரத்தில் மின்சாரம் வந்தது. ஆனால் சர்வதேச விமான நிலையத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக பயணிகள் புறப்பாடு பகுதியில் உடைமைகளை சோதனை செய்யும் ஸ்கேனர் கருவி, தானியங்கி கன்வேயர் பெல்ட், எஸ்கலேட்டர் போன்றவை வேலை செய்யவில்லை. அந்த நேரத்தில் ஏராளமான விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக செல்ல இருந்ததால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தொடர்ந்து குறைந்த மின் சப்ளையில் குறைபாடு ஏற்பட்டதால் விமான நிலைய பணியாளர்கள் மூலமாக உடைமைகள் சோதனையிடப்பட்டன.
விமானங்கள் தாமதம் மேலும், எஸ்கலேட்டர் இயங்காததால் வயதானவர்கள், ஊனமுற்றவர்கள் படிக்கட்டில் ஏறி இறங்க முடியாமல் அவதிக்கு உள்ளானார்கள். குறைந்த மின் அழுத்தம் காரணமாக சிங்கப்பூர், கோலாலம்பூர், பிராங்கபர்ட், துபாய், ஹாங்காங், மஸ்கட் உள்பட 8 இடங்களுக்கு செல்லும் விமானங்கள் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதேபோல் சர்வதேச விமான நிலையத்தில் வருகை பகுதியில் விமானங்கள் குறித்த நேரத்தில் வந்துவிட்டாலும் உடைமைகள் சோதனை செய்யும் பணிகள் தாமதமானது.
பயணிகள் சோதனைகளை முடித்துக்கொண்டு 2 மணி நேரம் தாமதமாக வெளியே வந்தனர்.காரணம் என்ன? நேற்று அதிகாலை 4.30 மணிக்கு பின்னர் குறைந்த மின் அழுத்தம் சரியானது. அதன்பின்னர் அனைத்து கருவிகளும் இயங்கின. விமான போக்குவரத்து சீரானது. மின்சார கேபிளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு இருக்கலாம். இது பற்றி விரிவான ஆய்வு செய்யப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் விமான நிலையத்திற்கு தனி டிரான்ஸ்பார்மர் மூலம் மின்சாரம் அனுப்பப்படுகிறது. கடப்பேரியில் இருந்து விமான நிலையம் வரை 10 கிலோ மீட்டர் தூரம் உயர் ரக கேபிள்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது. குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டதற்கும், மின்சார வாரியத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Category: மாநில செய்தி


0 comments