கோடை வெயில் அதிகமாக இருப்பதால், மின்சாரத் தேவை இதுவரை இல்லாத அளவுக்கு 13,665 மெகாவாட்டைத் தொட்டது. இதேபோல், தமிழ் நாடு மின்வாரியம் இதுவரை இல்லாத அளவுக்கு 292.23 மில்லியன் யூனிட் மின்சாரத்தை விநியோகித்துள்ளது.
தமிழகத்தில் வெயிலின் உக்கிரம் சிறிது கூட குறைய வில்லை. கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.
சென்னையில் கடந்த இரு தினங்களாக வெயில் 105 டிகிரி அளவுக்கு இருந்தது.
இதனால் கடந்த செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் மின்சாரத் தேவை கடுமையாக உயர்ந்துவிட்டது.
மின் சாதனங் களில் பயன்பாடு திடீரென அதிகரித்ததால் மின்சாரத் தேவை உயர்ந்ததாக மின் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின் தேவை உயர்வு
கடந்த செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் 13,465 மெகாவாட்டாக மின்சாரத் தேவை உயர்ந்தது.
கடந்த மே 16-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியான அன்று, 12,995 மெகாவாட் இருந்ததே, கடந்த கால அதிகபட்ச தேவையாகும்.
இந்நிலையில் புதன்கிழமை காலையில் மின்சாரத் தேவை 13,665 மெகாவாட்டாக மேலும் உயர்ந்தது.
அதேநேரம் புதன்கிழமை காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்சமாக தமிழக மின் வாரியம் 292.23 மில்லியன் யூனிட் மின்சாரத்தை விநியோகித்தது. இதுவரை எப்போதும் இல்லாத அதிக மின் உற்பத்தி மற்றும் விநியோகமாகும்.
கடந்த 14-ம் தேதி 289.66 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கி, மின் வாரியம் சாதனை படைத்திருந்தது.
ஆனால் 2 நாட்களில் தேவையும், உற்பத்தியும் மேலும் அதிகரித்துள்ளது.
அதிகாரிகள் விளக்கம்
இதுகுறித்து மின் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் அளவு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஏற்படும் மின்சாரத் தேவையை சமாளிக்க முடியாமல், ஆங்காங்கே மின் வெட்டை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள் மற்றும் மின் மாற்றிகள் ஆகியவற்றில் வெப்பநிலை காரணமாக அவ்வப்போது தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாகவும் எதிர்பாராத மின் தடை ஏற்படுகிறது' என்று தெரிவித்தனர்.
0 comments