சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் கடந்த ஆண்டு இதேநாளில் இருந்ததைவிட தற்போது நீர்இருப்பு அதிகம் உள்ளது. வீராணம் ஏரியும் நிரம்பிவிட்டதால் தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து தப்பியுள்ளது சென்னை மாநகர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளில் சமீபத்தில் நீர் இருப்பு மிகவும் குறைந்தது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நீரும் கடந்த மார்ச் 5-ம் தேதியோடு நிறுத்தப்பட்டதால் நிலைமை மேலும் மோசமானது. சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயமும் ஏற்பட்டது.
கோடை வெயில் சுட்டெரித்ததால், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க அனைத்து முன்னேற்பாடுகளையும் தமிழக பொதுப்பணித் துறையும், சென்னைக் குடிநீர் வாரியமும் எடுத்தன. சென்னையில் ஒருநாள்விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் சுமார் 55 கோடி லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
பல இடங்களில் குடிநீருடன் கழிவுநீரும் கலந்துவருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
கண்டலேறு அணை திறப்பு
இந்த நிலையில், சென்னையின் குடிநீர் தேவைக்காக உடனடியாக தண்ணீர் திறந்துவிடுமாறு ஆந்திர அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து கடந்த மார்ச் 26-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. 3 நாட்கள் கழித்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. பின்னர் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டதும், பூண்டி ஏரிக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, வினாடிக்கு 500 கனஅடியை நெருங்கியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 486 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.
கடந்த ஆண்டைவிட அதிகம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் கடந்த ஆண்டு இதே நாளில் இருந்த நீர்இருப்பைவிட தற்போது நீர்இருப்பு அதிகம் உள்ளது.
‘‘முதன்முறையாக இந்த ஆண்டு ஏரிகளில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து சென்னை மாநகர் நிச்சயம் தப்பிவிடும்’’ என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கனஅடி. திங்கள்கிழமை நிலவரப் படி இந்த ஏரிகளில் நீர்இருப்பு 2,997 மில்லி யன் கனஅடி. கடந்த ஆண்டு இதேநாளில் இந்த ஏரிகளின் நீர்இருப்பு 2,989 மில்லியன் கனஅடியாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏரிகளில் நீர்இருப்பு அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வீராணமும் நிரம்பியது
இதற்கிடையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்றொரு ஏரியான வீராணமும் நிரம்பியுள்ளது. இந்த ஏரியில் இருந்து வினாடிக்கு 77 கனஅடி தண்ணீர், குழாய் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது. கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும், வீராணம் ஏரி நிரம்பிவிட்டதாலும் குடிநீர் தட்டுப்பாட்டில் இருந்து சென்னை மாநகர் தப்பியுள்ளது.
‘முதன்முறையாக இந்த ஆண்டு ஏரிகளில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து சென்னை மாநகர் நிச்சயம் தப்பிவிடும்’ என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மற்றொரு ஏரியான வீராணமும் நிரம்பியுள்ளது. இந்த ஏரியில் இருந்து வினாடிக்கு 77 கனஅடி தண்ணீர் குழாய் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது.
0 comments