கட்சிகள், வேட்பாளர்களுக்கு விளம்பர பிரசாரங்கள் செய்வது தொடர்பாக சமூக வலைத்தளங்களுக்கு தேர்தல் கமிஷன் புதிய விதிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்கள்
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, பேஸ்புக், டுவிட்டர், யூ டியூப், விக்கிபீடியா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மேற்கொண்ட பிரசாரம், அந்தக் கட்சிக்கு கைகொடுத்தது.
அதைக் கண்டபிறகு, வரும் பாராளுமன்றத்தேர்தல், 4 மாநில சட்டசபை தேர்தல்களில் பல்வேறு அரசியல் கட்சிகளும், இளைய தலைமுறை வாக்காளர்கள், படித்த வாக்காளர்கள், இணைய தள ஆர்வலர்களைக் கவர்வதற்கு இந்த சமூக வலைத்தளங்களில் விளம்பரப் பிரசாரம் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.
விதிமுறைகள்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்வது தொடர்பாக சில விதிமுறைகளை தேர்தல் கமிஷன் வகுத்துள்ளது. அவை வருமாறு:–
* சமூக வலைத்தளங்களில் தேர்தல் தொடர்பான அரசியல் விளம்பரங்களை வெளியிடும் முன் அதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.
* சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் செய்து வருகிற விளம்பரங்கள் தொடர்பான கணக்கை பராமரித்து வர வேண்டும். கேட்கிற போது இந்த கணக்கு விவரங்களை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
* சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுகிற விளம்பரங்கள் சட்டவிரோதமானதாகவோ, குரோத எண்ணத்தை ஏற்படுத்துவதாகவோ, தேர்தல் நடத்தை விதிகளை மீறக்கூடியதாகவோ இருக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது முன்னணி சமூக வலைத்தளங்களுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரி தகவல்
‘தேர்தல் செயல்பாடுகளில் ஊடகங்களின் பங்கு’ என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று நடந்த கருத்தரங்கில், தேர்தல் கமிஷன் இயக்குனர் திரேந்தர் ஓஜா பங்கேற்று பேசினார். அப்போது அவர், ‘‘சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிற விளம்பரங்களுக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் ஊடக சான்றளிப்பு, கண்காணிப்பு குழுக்களிடம் முன் அனுமதி பெற வேண்டும். தேர்தல் கமிஷன் பல்வேறு கூட்டங்களை கூட்டி ஆலோசித்து இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டன’’ என்று கூறினார்.
அதே நேரத்தில் பல்வேறு சமூக வலைத்தளங்களின் சர்வர்கள், வெளிநாடுகளில் உள்ளதால் எங்கிருந்து விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன என்பதை கண்டுபிடிக்கவே சிரமமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
0 comments