பெரம்பலூர் - நீச்சல் குளத்தை பயன்படுத்தி உடல் ஆரோக்கியம் பெறுவதுடன், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பதக்கங்களையும் வெல்ல வேண்டும்-தரேஸ் அஹமது!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நவீன வசதியுடன் கூடிய நீச்சல் குளம் அமைக்கப்பட்டு விளையாட்டு, வீரர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நீச்சல் குளத்தில் நீரானது சுத்திகரிப்பு செய்வதற்கு நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, குளோரினேசன் செய்யப்பட்டு சுத்தமான நீர் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நீச்சல் குளத்தில் நீச்சல் பழக நாள் ஒன்றுக்கு 1 மணி நேரம் நீந்துவதற்கு சிறுவர்களுக்கு ரூ.25/-ம், பெரியவர்களுக்கு ரூ.50/-ம், கட்டணமாக வசு+லிக்கப்படுகின்றது. மாத கட்டணம், குடும்பத்தினர் அனைவரும் பயில கட்டணச்சலுகை வழங்கப்படுகின்றது. தேசிய அளவு நீச்சல் வீரர், வீராங்கனைகளுக்கு அரசாங்கம் மூலமாக கட்டண சலுகைகள் வழங்கப்படும். நீச்சல் பயிற்சியானது சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லவும், வேலைவாய்ப்பு பெறவும் சிறந்த விளையாட்டாகும்.
நீச்சல் கற்று கொள்வதற்கு ஓவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் ஜுன் வரை மூன்று மாதங்கள் சிறந்த நீச்சல் பயிற்றுநரை வைத்து பயிற்சி அளிக்கப்படும். நீச்சல் பயிற்சி பெற ஒரு நபருக்கு 15 நாள் கட்டணமாக ரூ.500/- பெறப்படும். பெண்கள் நீச்சல் குளத்தை பயன்படுத்த தனி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தங்கள் மாணவ, மாணவியர்களுக்கு நீச்சல் போட்டிகள் நடத்த நாள் ஒன்றுக்கு ரூ.2,000 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.
நடப்பது, ஓடுவது, மலையேறுதல், குதிஓட்டம் (ஜாகிங்) என்று பல்வேறு வகையான உடற்பயிற்சிகள் இருந்தபோதிலும் நீச்சல் பயிற்சி என்பது உடலின் அனைத்து உறுப்புக்களையும் புத்துணர்ச்சி ஏற்படுத்துவதுடன், சரிவர செயல்பட துணைபுரியும். மேலும் நீச்சல் பயிற்சியின் மூலம் உடலின் அதிகப்படியான கொழுப்பு கரைக்கப்பட்டு உடற்பொலிவு பெறுவதுடன், நோயற்ற வாழ்வு பெறலாம். எடுத்துக்காட்டாக 80 கிலோ எடையுள்ள ஒரு நபர் 30 நிமிடங்களில் 500 மீட்டர் தூரம் நீந்தினால் 223 கலோரி சக்தி உடலில் இருந்து எரிக்கப்படுகின்றது.
குறிப்பாக நீச்சல் பயிற்சியானது நுரையீரல் சம்மந்தமான அனைத்து உபாதைகளுக்கும் நல்ல தீர்வாகும். எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள், பள்ளி கல்லூரி நிர்வாகிகள் இந்த நீச்சல் குளத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி
0 comments