வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்ட அளவில் கருத்தரங்கம்!
பெரம்பலூர்,ஆக.25
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் தொழில் வணிகத்துறையின் சார்பில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் சார்பில், மாவட்ட அளவிலான கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சப் கலெக்டர் மதுசூதன் ரெட்டி குத்து விளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்து தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 35 நபர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.600 வீதம் மொத்தம் ரூ.21 ஆயிரம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சப் கலெக்டர் பேசியதாவது:–
ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பொறியியல் பட்டப் படிப்பு முடித்து கணினி மென்பொருள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றார்கள்.
இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள், தாங்கள் வசிக்கும் பகுதியில் புதிய தொழில்களை தொடங்கி பலருக்கு வேலைவாய்ப்பு வழங்குபவர்களாக உருவெடுக்க வேண்டும். 4, 5 பேர் மட்டுமே சேர்ந்து, பெரிய அளவில் செய்யும் தொழில்கள் தற்போது பல உள்ளன. இணைய தளம் மூலமாக பல்வேறு டிக்கெட் புக்செய்வது, மருத்துவ தகவல்கள் வழங்குவது, சிறு சேவைகளை இணையதளம் மூலமாக வழங்குவது உள்ளிட்ட தொழில்கள் எளிதில் தொடங்கி பெரிய நிலையை விரைவில் அடையலாம்.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் பயிர்களைக் கொண்டு மதிப்பு கூட்டு பொருட்களை தயார் செய்யும் தொழில்களை தொடங்க வேண்டும். பொறியியல் பட்டதாரிகள் தங்கள் கல்வியறிவை கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை தயாரித்து காப்புரிமை பெறவேண்டும். காப்புரிமை அடிப்படையில் தங்கள் கண்டுபிடிப்புகளுக்காக அதிக அளவில் பொருள் ஈட்டலாம்.
மாவட்ட தொழில் மையத்தின் மூலம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25 சதவீத மானியத்துடன் அதிக பட்ச வங்கி கடனாக ரூ.1கோடியும், பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் அதிக பட்ச மானியமாக 35 சதவீதத்துடன் உற்பத்தி தொழிலுக்கு கடனுதவியாக அதிக பட்சமாக ரூ.25லட்சமும், சேவைத் தொழிலுக்கு அதிக பட்சமாக ரூ.10 லட்சமும்,
படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 25 சதவீத மானியத்துடன் உற்பத்தி தொழிலுக்கு ரூ.5லட்ச கடனுதவியும், சேவைத் தொழிலுக்கு ரூ.3 லட்ச கடனுதவியும், வியாபாரத் தொழிலுக்கு ரூ.1 லட்ச கடனுதவியும் வழங்கும் திட்டங்கள் செயல் படுத்தப் பட்டு வருகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் இதுவரை படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 44 பயனாளி களுக்கு ரூ. 8 லட்சத்து 66 ஆயிரம் மானியத்துடன் ரூ.57லட்சத்து 73 ஆயிரம் கடனுதவி வழங்கவும், பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 36 பயனாளிகளுக்கு ரூ.62லட்சத்து 2 ஆயிரம் மானியத்துடன் ரூ.2 கோடியே 6 லட்சத்து 74 ஆயிரம் கடனுதவி வழங்கவும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ. 67லட்சத்து 62 ஆயிரம் மானியத் துடன் ரூ.2 கோடியே 70 லட்சத்து 49 ஆயிரம் கடனுதவி வழங்கவும், வங்கிகள் ஒப்புதல் அளித்துள்ளன.
இவ்வாறு சப் கலெக்டர் தெரிவித்தார்.
இந்த தொழில் நுட்ப கருத்தரங்கில் திறன் மேம்பாட்டின் அவசியம், இந்தியாவின் தலைசிறந்த தொழில் முனைவோர்கள், உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான வாய்ப்பு, மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் சந்தை வாய்ப்பு ஆகிய தலைப்புகளில் கருத்துக்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட தொழில் மையத் தின் பொது மேலாளர் மோகன் ரெங்கன், முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சிறுதொழில் பிரிவு கிளையின் முதன்மை வங்கி மேலாளர் புத்ததாசன் தலு, எம்.ஏ.எம் பொறியியல் கல்லூரி தொழில் முனைவோர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஹேமலதா, சென்னை குறுசிறு தொழில் சங்கம் மற்றும் எப்.என்.எப் கூட்டமைப்பின் பயிற்சி பிரிவு நிர்வாகி மைதிலி சதாசிவம், ரோவர் வேளாண் அறிவியல் மையத்தின் மனையியல் தொழில் நுட்ப வல்லுநர் விஜயலட்சுமி, தேசிய சிறுதொழில் கழக துணை மேலாளர் கார்த்திகேயன், வெற்றி பெற்ற தொழில் முனைவோர் கோவிந்தசாமி, அஸ்வின் பேக்கரி சத்திய மூர்த்தி ஆகியோர் தமது துறை சார்ந்த பணிகள் மற்றும் தொழில் நுட்ப அறிவுரைகளை வழங்கினர்.
Category: மாவட்ட செய்தி
0 comments