கோசி நதியில் பயங்கர வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து பிஹாரிலிருந்து ஆயிரக்கணக்கானோர் தற்காலிக முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தொடர் மழையால் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் கன மழை பெது வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கோசி நதி கரையோரம் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவினால் நதிநீர் அதன் பாதையில் போக வழி இல்லாமல், கோசி நதியில் நீர்நிலை மிகவும் அபாயகரமாக அதிகரித்து வருகிறது.
இதனால் ஏற்பட்டுள்ள பெரும் அடைப்பை நேபாள ராணுவம் உடைத்து விட முடிவு செய்துள்ளது. தொடர் மழையால், நிலச்சரிவினால் ஏற்பட்ட இடிபாடுகளை நீக்க வழியில்லாததால், வெடி வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் கோசியில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு, பிஹாரினுள் நுழையும் அபாயம் உள்ளது. இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், பிஹாரின் 8 மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதனை எதிர்கொள்ள, மத்திய மாநில அரசுகள் ஆலோசித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பிஹாரின் 30 கிராமங்களைச் சேர்ந்த
ஆயிரக்கணக்கானோரை, தற்காலிக முகாம்களுக்கு அனுப்பியுள்ளது. மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகாக சி17 ரக விமானத்தை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. விமானத்தில் 20 மருத்துவர்கள் கொண்ட குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் தேசிய பேரிடர் செயற்படை ஈடுப்பட்டுள்ளது. பல பகுதி மக்கள், அவர்கள் வீட்டை விட்டு வெளியேற தாங்களே முன் வருவதாகவும் அந்த குழுவினர் தெரிவித்தனர்.
நேபாள மின் துறை திட்டங்களுக்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, நேபாளம் சென்றுள்ள நிலையில், வெள்ள அபாய நிலையை எதிர்கொள்ள உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கோசி நதி நீர் வெளியேற்ற தற்போதைய சூழலில் ஆபத்தானதாக இல்லை. ஆனால் எந்த நேரத்திலும் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம். நீர் இருப்பு அபாய நிலையை ஏற்கனவே தாண்டிவிட்டது.
இருப்பினும் இதனால் பிஹார் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. பிஹார் மாவட்டங்களுக்கு உதவ தேசிய பேரிடர் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்" என்று அறிவித்துள்ளது.
0 comments