பெரம்பலூரில் 3ம் கட்ட கல்விக்கடன் முகாம்! 1,376 மாணவர்களுக்கு ரூ.25 கோடி கல்விக்கடன்!
பெரம்பலூர்,ஆக.24:
3ம் கட்டமாக நடந்த கல்விக்கடன் முகாமில் 1,376 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ரூ.25கோடி கல்விகடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மூன்றாம் கட்ட கல்விக்கடன் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் பெறுவதற்கான ஏற்பளிப்பு ஆணைகளை கலெக்டர் தரேஸ்அகமது வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மூன்றாம் கட்ட கல்விக்கடன் முகாமிற்காக முதல்தளம், இரண்டாம் தளங்களில் உள்ள கூட்ட அரங்குகளில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் பேங்க்ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க்ஆப் இந்தியா, பஞ்சாப்நேஷனல் பேங்க், பேங்க்ஆப் பரோடா, கார்ப்பரேசன்வங்கி, பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் பங்கேற்ற கவுண்டர்கள் அமைக்கப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முகாமில் மாணவ, மாணவியருக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன. விண்ணப் பதாரர்களின் விவரங்கள் 10 கணினிகள் மூலம் பதிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு ஒப்புகை சீட்டுகள் வழங்கப்பட்டன.
மாணவ, மாணவிகள் கல்விக்கடன்கேட்டு வழங்கிய விண்ணப்பங்கள் வங்கியாளர்களால் பரிசீ லிக்கப்பட்டு, கல்லூரி கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்டதன் அடிப்படையில் கல்விக்கடன் பெறுவதற்கு ஏற்பளிப்பு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மூன்று கட்ட கல்விக்கடன் முகாம்களில் கலந்து கொண்ட 1,376 மாணவ, மாணவிகள் ரூ25.01 கோடி கல்விக்கடன் பெற விண்ணப்பித்தனர்.
முகாமில் கலெக்டர் தரேஸ்அகமது கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில், மாணவ, மாணவிகளின் உயர்கல்வி, பொருளாதார காரணங்களால் தடைபடக் கூடாது என்பதற்காக கல்விக்கடன் முகாம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டுள்ளது. கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் மாவட்ட மின் ஆளுமைத்திட்டத்தின் மூலம் உடனுக்குடன் வழங்கப்பட்டன. இதுவரை நடைபெற்ற மூன்று கட்ட கல்விக்கடன் முகாம்களிலும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மொத்தம 1,376 மாணவ, மாணவிகள் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். வங்கிகளின் கல்விக்கடன் வழங்கும் நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாரந்தோறும் ஆய்வு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது என்றார்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜன்துரை, சப்கலெக்டர் மதுசூதனரெட்டி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்டஇயக்குநர் அய்யம்பெருமாள், முன்னோடி வங்கிமேலாளர் சந்திரகேரன் உட்பட அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments