Unknown |
3:08 PM |
0
comments
பெரம்பலூர் அருகே ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 39 பேர் காயம் அடைந்தனர்.
பிரம்பால் அடித்தார்
பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைப்பாடப்பிரிவு ஓவிய ஆசிரியராக பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது45) பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் செல்வகுமார் 2 மாத மருத்துவ விடுப்பிற்கு பின்னர் பள்ளிக்கு வந்துள்ளார். ஆசிரியர் வரவில்லை என்று நினைத்த 10–ஆம் வகுப்பு அ பிரிவு மாணவ– மாணவிகள், கணித பாடத்தை படித்துக்கொண்டிருந்தனர்.
இதனை அறிந்த ஓவிய ஆசிரியர் செல்வகுமார், மாலை நேரத்தில் ஓவியம் கற்றுக்கொடுக்கும் அறையில் இருந்து கொண்டு வகுப்பு லீடரை வரச்செய்துள்ளார். பின்னர் அனைத்து மாணவ–மாணவிகளையும் தனது அறைக்கு வருமாறு அழைத்து 39 பேரை பிரம்பால் சரமாரியாக விளாசி உள்ளார். இதில் பலருக்கு உள்ளங்கைகளில் தழும்பும், வீக்கமும் ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் காயம்
இதனால் வீடு திரும்பியவுடன் மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் ஆசிரியர் அடித்தது பற்றி கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து பெற்றோர், பள்ளித்தலைமை ஆசிரியர் பாஸ்கரனிடம் வாய்மொழியாக புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பிரம்பு அடிபட்டு காயமடைந்த மாணவ–மாணவிகளை தனியார் மருந்தகத்திற்கு அழைத்து சென்று களிம்பு மருந்து போட்டு வீட்டிற்கு அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவ–மாணவிகளின் பெற்றோரும், பொதுமக்களும் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அவர்களை பள்ளி தலைமை ஆசிரியரும், பள்ளி ஆசிரியர்களும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல்கூறி அவர்களது பெற்றோர்களை சமாதானம் செய்தனர்.
அதிகாரியிடம் புகார் அளிக்க முடிவு
10–ஆம் வகுப்பில் 3 மாணவர்கள் விடுப்பு எடுத்திருந்ததால், அவர்கள் ஆசிரியரின் பிரம்படியில் இருந்து தப்பித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆசிரியர் செல்வகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டரிடமும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியுடமும் புகார் அளித்து முறையிட, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளனர்.
Category:
மாவட்ட செய்தி
0 comments