வி.களத்தூர் அருகே தீ விபத்து : 2,500 கோழிகள் நாசம்!
பெரம்பலூர் மாவட்டம், வி. களத்தூர் அருகேயுள்ள கோழிப்பண்ணையில் சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 2,500 கோழிகள், கொட்டகை எரிந்து நாசமானது.
வேப்பந்தட்டை அருகே தொண்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சிவசாமி மகன் ஜெய்சங்கர் (33). பொறியியல் பட்டதாரியான இவர், தமிழக அரசின் கோழிப்பண்ணைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், தொண்டப்பாடி- அனுக்கூர் சாலையில் அவருக்குச் சொந்தமான வயலில் கோழிப்பண்ணை அமைத்து, அதில் 2500 கோழிகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் கோழிப்பண்ணை அருகேயுள்ள வயலில் காய்ந்த செடிகளை அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தீ வைத்துக் கொளுத்தியபோது, கோழிப்பண்ணை கொட்டகையில் தீ பரவி ரூ. 3 லட்சம் மதிப்பிலான 2,500 கோழிகளும், ரூ. 4 லட்சம் மதிப்பிலான தடவாளப் பொருள்கள் மற்றும் கொட்டகையும் எரிந்து சாம்பலானது.
தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், வருவாய், காவல் துறையினர் மற்றும் வங்கியாளர்கள் ஆகியோர் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், வி. களத்தூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments