பிஹார் மாநிலத்தில் டெல்லி-திப்ருகர் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 5பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் 13 பேரின் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
அதேபோன்று கோல்டன் கஞ்ச் ரயில் நிலையத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் சரக்கு ரயில் ஒன்றும் தடம்புரண்டது.ரயில் விபத்துக்கு மாவோயிஸ்டுகளின் சதி காரணமாக இருக்கலாம் என்ற தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார். “விசாரணைக்கு முன்பே மாவோயிஸ்டுகள் மீது குற்றம்சாட்டக்கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியிலிருந்து திப்ருகர் நோக்கி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. பிஹார் மாநிலம் சரன் மாவட்டத்திலுள்ள சப்ரா ரயில் நிலையத்தை புதன்கிழமை மதியம் வந்தடைந்தது. பின் அங்கிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இது தொடர்பாக கிழக்கு மத்திய ரயில்வே தலைமை மக்கள்தொடர்பு அதிகாரி அர்விந்த் குமார் ராஜக் கூறியதாவது:
ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் கோல்டன் கஞ்ச் ரயில்நிலையம் அருகே மதியம் 2.11 மணிக்கு தடம்புரண்டது. பி-5, பி6, பி-7, பி-8, பி-9, பி-10 ஆகிய பயணிகள் பெட்டியும், மின்சக்திப் பெட்டியும் தடம்புரண்டன. பி-1, பி-2, பி-3, பி-4 ஆகிய பயணிகள் பெட்டியும், சமையல்கூட பெட்டியும் தலைகீழாகக் கவிழ்ந்தன.
இதில், சம்பவ இடத்திலேயே 3 பயணிகளும், காயமடைந்தவர் களில் மருத்துவமனையில் இருவர் உயிரிழந்தனர். சில பெட்டிகள் தண்ட வாளத்திலிருந்து 700 அடி தொலைவுக்கும் அதிகமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளன என்றார்.
தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் ரயில் பெட்டிகளின் அடியிலிருந்து 3 பேரின் சடலங்களை மீட்டனர். ‘கவிழ்ந்த பெட்டிகள் கிரேன் உதவியால் தூக்கப்பட்ட பின்னரே, அப்பெட்டிகளின் அடியில் மேலும் சடலங்கள் உள்ளனவா என்பது தெரியவரும்’ என தேசிய பேரிடர் மேலாண்மைப் படை கமாண்டன்ட் விஜய் சின்ஹா தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் 14 பேர் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 13 பேர் மிகமோசமாகக் காயமடைந்திருப்பதாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அமர்கந்த் ஜா அமர் தெரிவித்துள்ளார். மற்றவர்கள் சப்ரா பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதர பயணிகள் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சரக்கு ரயில் தடம்புரண்டது
மற்றொரு சம்பவத்தில் பிஹார் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் சகியா மற்றும் மேஷி ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் தடம்புரண்டது. இந்த ரயில் இரும்புக் கம்பிகளை ஏற்றிச் சென்றது. இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு நடைபெற்றது. இவ்விபத்தால் முஸாபர்பூர்-நர்காடியாகஞ்ச் இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இழப்பீடு அறிவிப்பு
“ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது கவலைக்குரியது. விபத்து தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், சிறிய காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் நிவாரண உதவியாக வழங்கப்படும்” என அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
மாவோயிஸ்டுகள் காரணமா?
விபத்தின் பின்னணியில் மாவோயிஸ்டுகள் இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து ரயில்வே வாரிய தலைவர் அருணேந்திர குமார் கூறுகையில், “விபத்துக்கு திட்டமிட்ட சதி காரணமாக இருக்கலாம் என்பதற்கு முகாந்திரம் உள்ளது. தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. தடம்புரள்வதற்கு அது காரணமாக இருந்திருக்கலாம். மற்றொரு இடத்தில் சரக்கு ரயிலின் 18 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. அதற்கும் குண்டுவெடிப்புதான் காரணம். மாவோயிஸ்டுகள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்” என்றார்.
வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
இதே மாவட்டத்தில் தரியாபூர் பஜார் பகுதியில் மூன்று வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்க செய்யப்பட்டன. சரன் மண்டல டிஐஜி வினோத் குமார் கூறுகையில், “வெடிகுண்டுகளை மாவோயிஸ்டுகள் வைத்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை” என்றார்.
0 comments