பாஸ்போர்ட் விண்ணப்பம் இனி போலீஸ் வெரிபிகேஷன் தேவையில்லை!

பா.ஜ.,வைச் சேர்ந்த பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்து, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.சமீபத்தில், அரசு வேலை மற்றும் அரசிடம் இருந்து பிற தகவல்களை பெற விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்ப படிவங்களில், அரசு அங்கீகாரம் பெற்ற, உயரதிகாரிகளிடம் கையெழுத்து பெறத் தேவையில்லை; அத்தகையவர்களின் சுய ஒப்புதலே போதுமானது என, மத்திய அரசு அறிவித்தது.
இதனால், அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து, ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லாமல் போனது.இப்போது அதில் கூடுதல் சலுகையாக, அரசு வேலை பெற்றவர்கள் மற்றும் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர் களுக்கு நடத்தப்படும், போலீஸ் விசாரணை தேவையில்லை என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கு பதில் வேலை கிடைத்தவர்கள் மற்றும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த வர்களின் சுய ஒப்புதல் உறுதிமொழியே போதும் என, அரசு விரும்புகிறது. இதன் மூலம், கால விரயம் தவிர்க்கப்படுவதுடன், லஞ்சம் கொடுக்கப்படுவதும் தடுக்கப்படும் என, அரசு நம்புகிறது.
எனினும், இதில் உடனடியாக அறிவிப்பு வெளியிடாமல், சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் மாநில அரசுகளிடம் கருத்து கேட்டறிந்த பிறகு, அறிவிப்பு வெளியிட உள்ளது.இதற்கான பரிந்துரையை செய்துள்ள, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையை பரிசீலித்து, அதற்கான உத்தரவை, மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் வெளியிட உள்ளது.
Category: மாநில செய்தி
0 comments