சென்னை அருகே மழையால் மற்றொரு சோக சம்பவம் தூங்கிக்கொண்டிருந்த கட்டிட தொழிலாளர்கள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்பு!
சென்னை அருகே, மழையின் காரணமாக மதில் சுவர் இடிந்து குடிசைகள் மீது விழுந்ததில், தூங்கிக்கொண்டிருந்த 10 தொழிலாளர்களும், ஒரு குழந்தையும் உயிரிழந்தனர். ஒருவர் காயத்துடன் உயிர் தப்பினார்.

சென்னை
சென்னை மவுலிவாக்கத்தில், 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் உயிரோடு புதைந்து மாண்டு போன கொடூர விபத்து, தமிழகம் மட்டுமல்லாமல் அகில இந்தியாவையே உலுக்கிவிட்டது.
மற்றொரு விபத்து
அந்த விபத்தின் சோகச்சுவடுகள் அழிவதற்கு முன்பே, சென்னை அருகே நேற்று அதிகாலையில் இன்னொரு கட்டிட விபத்து நடந்து, 11 பேர் உயிரை காவு வாங்கி விட்டது. ஒரு வாலிபர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டார்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
சேமிப்பு கிடங்கு
சென்னை செங்குன்றம் அலமாதி கிராமத்தை அடுத்த, எடப்பாளையம் கிராமத்தில், உப்பரபாளையம் ரோட்டில், பாலா என்பவருக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு உள்ளது.
அந்த சேமிப்பு கிடங்கு 16 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. அங்கு தலா 1.20 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட, 2 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. அந்த சேமிப்பு கிடங்குகள் மாதம் ரூ.30 லட்சத்துக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அந்த சேமிப்பு கிடங்குகளில், பெப்சி குளிர்பான நிறுவனம், நிப்ரான் மருந்து கம்பெனி மற்றும் ஷார்ப் எலக்ட்ரானிக் பொருள் கம்பெனியினர் வாடகை கொடுத்து, தங்களது பொருட்களை சேமித்து வைத்துள்ளனர். அந்த சேமிப்பு கிடங்குகளை சுற்றி 20 அடி உயரத்தில் மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது.
ஆந்திர தொழிலாளர்கள்
இந்த சேமிப்பு கிடங்குக்கு எதிரில், பாலாவின் அண்ணன் மோகன், இன்னொரு சேமிப்பு கிடங்கை கட்டி வருகிறார். அந்த சேமிப்பு கிடங்கின் கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அந்த கட்டுமான பணிகளில், ஆந்திர மாநில தொழிலாளர்கள் சுமார் 30 பேர் ஈடுபட்டனர். வட மாநில தொழிலாளர்களும் கட்டுமான பணி செய்து வந்தனர்.
ஆந்திர மாநில கட்டுமான தொழிலாளர்கள், பாலாவின் சேமிப்பு கிடங்கு மதில்சுவரையொட்டி 7 குடிசைகள் அமைத்து வசித்து வந்தனர். அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். இரவு அந்த குடிசைகளிலேயே படுத்து தூங்குவார்கள். நேற்று முன்தினம் இரவும், அந்த தொழிலாளர்கள் வழக்கம்போல் குடிசைகளில் படுத்து தூங்கினார்கள்.
ஆனால் நேற்று காலை விடியும் போது, அந்த தொழிலாளர்கள் வாழ்க்கையில் இடி விழுந்தது போன்ற சோகச்சம்பவம் நிகழ்ந்து விட்டது. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில், இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இருள் சூழ்ந்து காணப்பட்டது.
மதில் சுவர் இடிந்தது
அதிகாலை 3 மணி அளவில், ஆந்திர தொழிலாளர்கள் படுத்து தூங்கிய குடிசைகள் மீது, சேமிப்பு கிடங்கின் மதில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. சுமார் 200 அடி நீளத்து சுவர் இடிந்து விழுந்து குடிசைகளை அமுக்கியது. இதனால் குடிசைக்குள் தூங்கிக்கொண்டிருந்த கட்டிட தொழிலாளர்கள், அப்படியே மாட்டிக்கொண்டனர். மழை பெய்ததால், பெரிய அளவில் சத்தமும் கேட்கவில்லை. இதனால் நேற்று காலை 6 மணி வரை, இந்த விபத்து பற்றி யாருக்கும் தெரியவில்லை.
சேமிப்பு கிடங்கின் காவலாளிகள் குப்பன், மோகன் இருவரும் இரவில் நன்றாக தூங்கி விட்டனர். இதனால் மதில்சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. நேற்று காலை 6 மணி அளவில், எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரோஜா என்ற பெண்மணி அந்த வழியாக வந்தபோது, அவர்தான் மதில் சுவர் இடிந்து விழுந்து கிடந்ததை பார்த்தார். அவர் பதறியபடி, ஊருக்குள் சென்று தகவல் சொன்னார்.
மீட்பு பணி
அடுத்த அரை மணி நேரத்தில், போலீஸ்படை, தீயணைப்பு படை, வருவாய்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என்று எண்ணற்ற மீட்பு படையினர் வாகனங்களில் மதில் சுவர் இடிந்து விழுந்த இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 300 பேர் மீட்பு பணி செய்தனர். 3 ஜே.சி.பி. எந்திரங்களும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டன.
காலை 7 மணிக்கு ஒரு குடிசையில் இருந்து, 3 பிணங்கள் மீட்கப்பட்டன. ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை பிணம் இடிபாடுகளில் இருந்து எடுக்கப்பட்டது. அடுத்து இன்னொரு வீட்டில் 4 பேர் பிணமாக கிடந்தனர். 3-வது வீட்டிலும் 3 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். 4-வது வீட்டில் ஒருவரின் பிணம் மீட்கப்பட்டது.
11 பேர் பலி
மதில் சுவர் இடிபாடுகளில் சிக்கி, 11 பேர் தூக்கத்திலேயே மாண்டு போனார்கள். அவர்களின் பிணங்கள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டு இருந்தது. மாண்டவர்களின் உடல்கள், ஆம்புலன்ஸ் வேன்களில் ஏற்றப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
பிரேத பரிசோதனையை நடத்த டாக்டர்கள் குழுவினர் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டது.
உடல்கள் அங்கு போய்ச் சேர்ந்ததும் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
உயிர் பிழைத்த வாலிபர்
இதற்கிடையில் இடிபாடுகளில் ஒரு கை திடீரென தெரிந் தது. அந்த இடத்தில் மீட்பு படையினர் இடிபாடுகளை அகற்றியபோது, நாகராஜன் (வயது 19) என்ற வாலிபர் உயிரோடு கிடந்தார். அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். டாக்டர் கள் சிகிச்சைக்குப்பின் அவர் உயிர் பிழைத்துக்கொண்டார். அவரிடம் விசாரணை நடத்திய பிறகுதான், இறந்தவர்கள் யார், யார் என்ற தகவல் கிடைத்தது.
உயிர் பிழைத்த நாகராஜன் மற்றும் இறந்தவர்கள் 11 பேரும், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 2 மாதமாக அங்கு தங்கி இருந்து வேலை செய்தனர்.
பெயர் விவரம்
இந்த விபத்தில் இறந்தவர்களின் பெயர் விவரம் வருமாறு:-
1. பாந்தையா (வயது 45). 2. லட்சுமி (35). 3. சிம்மாத்திரி (40). 4. செம்பய்யா (45). 5. ஜெகதீஷ் (2). 6. ஜெயம்மாள் (65). 7. ராமு (19). 8. கொம்பையா (45). 9. அஜீத்மண்டேல் (55). 10. லிமா மண்டேல் (50). ஒரு உடல் அடையாளம் தெரியவில்லை.
இவர்களில் அஜீத் மண்டேலும், லிமா மண்டேலும் கணவன்-மனைவி ஆவார்கள். இறந்த 2 வயது குழந்தை யாருடையது என்று தெரியவில்லை. இறந்தவர்கள் பற்றி அவர்களது சொந்த ஊருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் பார்த்தார்
இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்தவுடன் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, வேணுகோபால் எம்.பி. ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி, தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், வடக்கு மண்டல ஐ.ஜி. மஞ்சுநாதா, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியமூர்த்தி, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தீயணைப்பு துறை அதிகாரிகள் விஜயசேகர், ராமையா மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த செங்குன்றம் எடப்பாளையம் பகுதி சோகமாக காணப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் வந்து, சம்பவ இடத்தை பார்த்து, சோகத்துடன் சென்றனர்.
Category: மாநில செய்தி
0 comments