பாலிடெக்னிக் படிப்புகள்: ஆண்டுதோறும் குறைந்து வரும் மாணவர் சேர்க்கை!
காரைக்குடி: வேலைவாய்ப்பு குறைந்து வருவதால் பாலிடெக்னிக்குகளில் மாணவர்கள் சேர்க்கை 50 சதவீதத்துக்கும் மேலாக குறைந்து வருவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் 30 க்கும் மேற்பட்ட அரசு பாலிடெக்னிக்குகள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாலிடெக்னிக்கில் படிப்பதற்கு இடம் கிடைப்பதே அரிதாக இருந்தது. இன்ஜி. கல்லூரிகளின் பெருக்கம் பாலிடெக்னிக்குகளை தள்ளாட வைத்தது. இருப்பினும் அரசு பாலிடெக்னிக்குகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பு இருந்தது.
சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளோடு எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளும் ஆரம்பிக்கப்பட்டன. இதில் கடைசி 2 பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வருகிறது. மற்ற பிரிவுகளில் தனியார் பாலிடெக்னிக்கில் 50 சதவீதமும், அரசு பாலிடெக்னிக்குகளில் 20 சதவீதமும் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் நிரப்பப்படாமலேயே உள்ளது.
காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக்கில் இந்த ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் 10 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 15 இடங்களும் காலியாக உள்ளன.
பாலிடெக்னிக் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "ஐ.டி. துறையில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி காரணமாக, கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே இந்த பாடப்பிரிவுகளில் காலியிடங்கள் அதிகரித்து வருகிறது. மற்ற பிரிவுகளில் இடம் கிடைக்காதவர்கள், படிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை, இந்த பிரிவு வேண்டாம் என ஒதுங்குகின்றனர்.
எனவே தற்போதைய தேவைக்கேற்ப புதிய பாடப்பிரிவுகளை, பாலிடெக்னிக்குகளில் துவங்கினால் மட்டுமே எதிர்காலத்தில் மாணவர் சேர்க்கையை வலுப்படுத்த முடியும்" என்றார்.
Category: மாணவர் பகுதி
0 comments