"நான்கு மாத கடின உழைப்பால் வாழ்க்கை மாறும்'
போட்டித் தேர்வுகளில் நான்கு மாத கால கடின உழைப்பை மேற்கொண்டால், வாழ்க்கையை மாற்றியமைக்கும் முடிவுகளை எதிர்பார்க்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூர் ஆட்சியரகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் - 4, விஏஓ தேர்வுகளுக்காக அளிக்கப்படும் இலவசப் பயிற்சி வகுப்புகளை திங்கள்கிழமை தொடக்கி வைத்த அவர் மேலும் பேசியது: மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட மைய நூலகம், மாவட்ட வேலைவாய்ப்பகம் ஆகிய இடங்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க 319 பேர் தகுதித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இங்கு அளிக்கப்படும் பயிற்சியில் மட்டுமன்றி, மற்ற நேரங்களிலும் தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் வேண்டும். தேர்வெழுதும் வரை வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும்.
பெற்றோர், உறவினர்கள், குழந்தைகளின் ஒத்துழைப்பைப் பெற்று முழு நேரமும் தேர்வுக்காகத் தயாராக வேண்டும். இங்கு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் முதல், பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, பட்ட மேல்படிப்பு, பொறியியல் படிப்பு முடித்தவர்களும் பயிற்சி பெற வந்துள்ளது, பயிற்சி அளிப்போருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
பயிற்சி பெறுவோர் குழு அமைத்து, தெரிந்த விஷசயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணி, ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் ஜெயராமன் உள்பட அரசு அலுவலர்கள், தன்னார்வ பயிற்றுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Category: கல்வி
0 comments