.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வட்டி – ஒரு சமுதாயக் கேடு!

Unknown | 11:50 PM | 0 comments

.
 “(அதிகமானோர்) வட்டியை உண்ணக் கூடிய அல்லது அதனுடை புழுதியாவது படியக் கூடிய ஒரு காலம் மக்கள் மீது வரும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவப்பது அபூ ஹுரைர (ரலி) அவர்கள். (நஸாயீ) - 

இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்நபி மொழி நூற்று நூறு பொருந்தி வருவதை தெளிவாகவே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. வட்டியின் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது என்று முடிவு எடுத்து செயல் பட்டு வரும் பல சகோதரர்கள் ஏதேனும் ஒரு நெருக்கடியை சந்திக்கும் போது, இந்தத் தீமையில் போய் மாட்டிக் கொள்கிறார்கள்.
வட்டி என்பது பாவம் – தவறு என்று அணைவர்களும் அறிந்திருந்தும் நடப்பது என்ன?
  • எனது மனசாட்சியின்படி வட்டியும் ஒரு தொழில் தான். (வீட்டு வாடகை, கார் வாடகை போன்று இதுவும் ஒன்று தான்).
  • நேரடியாக வட்டி வாங்குவது ஹராம். ஆனால் பேங்க், எல் ஐ சி, வீட்டு லோன், இன்ஸ்டால்மெண்ட் வட்டி போன்றன இன்றைய காலத்தில் தவிர்க்க இயலாதது.
  • எங்களுக்கு யாரும் கடன் தருவது இல்லையே! வட்டிக்குத் தானே பணம் பெற வேண்டும்.
  • ஒத்தி என்பதும் வியாபாரம் தானே! – வாழையடி வாழையாக எங்களது முன்னோர்கள் செய்து வந்துள்ளார்களே!
  • கடனாக ஒரு தொகையை விவசாயிடம் கொடுத்து விட்டு வருடா வருடம் இத்தனை மூட்டை நெல் வாங்குவதும் ஒரு வகை வியாபாரம் தானே!
  • வியாபாரிகளிடையே நடைபெறும் ஏலச் சீட்டு – இதுவும் எங்களுக்குள் உள்ள ஒரு உதவி முறை தானே!
இப்படி அவரவர்கள் வட்டியில் மூழ்கி உள்ளனர்.  சிலர்களுக்கு வட்டி பற்றித் தெரியாமல் உள்ளனர். ஆனால் மார்க்கத்தை அறிந்த பலர் இதனுள் மூழ்கியுள்ளதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. நல்லது கெட்டது, ஞாயம் பேசும் இவர்கள் வட்டியின் கொடுமையை சிந்திப்பது இல்லை.
பலர் சேவை செய்வார்கள், வணக்கங்கள் பல செய்வார்கள் – ஆனால் பணம் என்றால் பின் தங்கி விடுவார்கள். ஆம் ஜகாத் – ஸதகா விசயத்தில் பொடு போக்கு – ஏமாற்று. ஆனால் பணத்தைப் பெருக்க வட்டி விசயத்தில் அதிக அக்கறை!
இப்படி பணம் படைத்த பலர் தங்களது தேவைகளை அளவுக்கு மேல் பெருக்கிக் கொண்டு – பேராசையால் கடன் வாங்கி பல சொத்துக்களை வாங்கி வட்டி கட்டுகின்றனர். ஆக ஜகாத் கொடுக்க வேண்டிய இவர்கள் – இன்று – இல்லை என்றுமே கடனாளியாக உள்ளனர். ஏழைகளை வாழ்வை உயர்த்தும் ஜகாத் இப்படி ஏமாற்றப்படுகிறது. தேவையுள்ள எளியவர்களுக்கு இவர்கள் எப்படி கடன் கொடுப்பார்கள்!
ஆனால் பேராசையால் அதிக வட்டிக்கு பணத்தை கொடுத்து முதலையும் இழப்பார்களே தவிர தேவையுள்ள மனிதர்களுக்கு அழகிய கடன் கொடுப்பது இல்லை! தங்கத்திலே முதலீடு செய்தார்கள். – சிட் பண்டிலே முதலீடு செய்தார்கள். சிட்பண்டுகாரன் ஓடி விட்டான். தங்கம் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலையை விட குறைந்து விட்டது.
ஆக உங்கள் பணம் உங்களுக்கும் நஸ்டம் – சமுதாயத்திற்கும் பயன்படவில்லை! அந்த தேயையுள்ள மனிதன் கட்டும் வட்டிக்கு நீங்களும் ஒரு காரணம் என்பதை மறக்கலாமா?
உண்மையில் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டிருந்தால் – உணவு தரக்கூடியவன் – அல்லாஹ்.! அல்லாஹ்வின் நாட்டம் இன்றி – இந்த பணம் எனக்கு எந்த நன்மையையும் செய்யாது – நான் சேர்க்கும் இந்த பணம் எனது வாரிசுகளுக்கு எந்த பயனையும் ஏற்படுத்தாது என்று நம்ப வேண்டும்.
ஒன்றுமில்லாத எத்தணையோ குடும்ப வாரிசுகள் இன்று மிகவும் உயர்வான நிலையில் உள்ளனர். படிக்காதவர்கள் பலர் படித்தவர்களை விட நல்ல நிலையில் உள்ளனர். திறமையானவர்களை விட திறமையற்றவர்கள் பலர் மிகவும் நல்ல நிலையில் உள்ளதைப் பார்க்கின்றோம். முயற்சி மட்டும் நம் கடமை. பலன் என்பது அல்லாஹ்வின் கையில் என்பதை நம்ப வேண்டும்.
“வட்டியினால் அதிகரிக்கும் ஒருவனது செல்வம், இறுதியில் குறைந்து (அழிந்தே) விடுகிறது” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூட்கள்: இப்னு மாஜா, ஹாகிம்.

“அல்லாஹ் வட்டியை அழிக்கிறான்; தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்” (2:276)
வட்டியில் திளைக்கும் சகோதரர்களே! கீழே உள்ளவற்றை கொஞ்சம் சிந்தியுங்கள்:
“வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து, வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை வந்தப்பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் (வட்டித் தொழில்) செய்வோர் நரகவாசிகள் ஆவர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல் குர்ஆன்: 2:275)
“நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!” “அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்து விடுங்கள்” (அல் குர்ஆன்: 2:278,279.)
“வட்டியை உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதற்கு சாட்சியம் அளிக்கும் இருவர், கணக்கு எழுதுபவன் ஆகிய அனைவரையும் நபிகள் நயாகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்” என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா.)
‘ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, ‘சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!’ என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, ’1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
‘ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ)
ஒத்தி – என்றால் என்ன?
ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும்.
ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.
‘சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
ஏலச்சீட்டு வட்டியாகுமா?:
ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும்.
இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.
குலுக்கல் சீட்டு:
குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது.
அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.
தவணை முறையில் பொருள் வாங்குவது:
இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று.
இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது.
வங்கியில் வேலை செய்வது:
‘வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
பகடி கூடுமா?:
பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார்.
பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது.
அல்லாஹ் நம் அணைவர்களையும் மோசமான வட்டியிலிருந்து காப்பாற்றுவானாக!
 V .களத்தூர் மக்களுக்கு  வட்டி இல்லா அழகிய கடன் 
 புஷ்ரா நல அறக்கட்டளை கொடுக்கிறது . நீங்களும் இதில்
உறுப்பினராக  இணைந்து பயன்  பெரும் படி 
கேட்டு கொள்கிறோம் .

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1