.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

முஸ்லிம்களின் எதிர்காலம்… மதரஸாக்களின் கையில்…!

Unknown | 8:59 PM | 0 comments

.

உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களிடையே ஒரு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டு வருகிறது. இந்த எழுச்சி குறித்து முஸ்லிம் சமூகமும் அதன் தலைவர்களும் அறிந்துள்ளார்களோ இல்லையோ முஸ்லிம் சமூகம் குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்யும் அனைவரும் அறிவர். குறிப்பாக இஸ்லாத்தை எதிர்த்து நிற்கும் தீய சக்திகள் நன்றாக அறிந்துள்ளனர். இந்த எழுச்சியை எப்படி தடுத்து நிறுத்துவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
இஸ்லாம் குறித்து அதிகம் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும், நபி (ஸல்) அவர்களின் வாழ்வு குறித்து தெரிந்து அதன் அடிப்படையில் தங்களது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை வேட்கை உலக முஸ்லிம்களிடத்தில் பெருகி வருகிறது.
இந்த எழுச்சிக்கு பல காரணங்கள் உண்டு.
அதில் அடிப்படையானது, முக்கியமானது இந்தியாவில் 1992 டிசம்பர் 6 அன்று பாபர் பள்ளிவாசல் இடித்து நொறுக்கப்பட்ட சம்பவம். இந்தச் சம்பவம் இந்திய முஸ்லிம்களையும் இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் முஸ்லிம்களையும் விழித்து எழச் செய்தது.
சுதந்திர இந்தியாவில் இந்திய முஸ்லிம்களின் சமூக அரசியல் வாழ்வை 1992 க்கு முன்பு – பின்பு என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1992 வரை நிகழ்கால வாழ்வு குறித்தும் எதிர்கால வளர்ச்சி குறித்தும் அதிகம் சிந்திக்காமல் இருந்த முஸ்லிம் சமூகத்தை; நாடாளுமன்ற ஜனநாயகம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இந்திய நாட்டில் முஸ்லிம்களுக்கான அரசியல் பாதையை அல்குர்ஆனோடும் ஹதீஸோடும் உரசிப் பார்த்து வகுக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையோ; இஸ்லாமிய மார்க்கத்தின் எல்லைக்குட்பட்ட அரசியல் வழியில் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற எண்ணமோ இல்லாமல் இருந்த இஸ்லாமிய அரசியல் அமைப்புகளை 1992 டிசம்பர் 6 சம்பவம் தலைகீழாகப் புரட்டிப் போட்டது.
இனி என்ன செய்வது என்று திகைத்து நின்ற முஸ்லிம் சமூகம் கடும் நெருக்கடியை சந்தித்தது. அந்த நெருக்கடி தான் 1992 க்குப் பிறகு முஸ்லிம் அடையாள அரசியலை உசுப்பிவிட்டது/ தனது சமூக பொருளாதார அரசியலை முஸ்லிம் சமூகம் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கிய காலம் அது.
பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட பிறகு இந்திய, தமிழக முஸ்லிம்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வும், எழுச்சியும் அவர்களிடம் பல விதமான மாற்றங்களைக் கொண்டு வந்தது.
விளைவு : -
புதிதாக பல்வேறு சமூக அரசியல் இயக்கங்கள் அமைப்புகள் தோன்றின. குடியரசு இந்தியாவில் செயல்பட்டு வந்த முஸ்லிம் லீக் போன்ற பாரம்பர்ய கட்சிகளின் இந்தியத் தன்மை கொண்ட சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் இருந்து மாறுபட்டு சமூக அரசியல் தளத்தில் வீரியமான இஸ்லாமிய அடையாளத்துடன் இஸ்லாத்தை உயர்த்திப் பிடிக்கும் உலகளாவியப் பார்வை கொண்ட இயக்கங்கள் தமிழக முஸ்லிம் சமூகத்தில் தோன்றின.
இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய இயக்கங்களின் எழுச்சியும், நடவடிக்கையும் ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களிடம் இஸ்லாமிய ஆர்வத்தையும் வேட்கையையும் அதிகப்படுத்தியது. கருத்து வேறுபாடுகள், பிளவுகள், குரோதங்கள் போன்ற இஸ்லாம் வெறுத்த விவகாரங்கள் இந்த இயக்கங்களிடம் பெருகியது இவர்களின் பலவீனம் என்றாலும் கூட இஸ்லாம் குறித்த ஆர்வமும் இஸ்லாத்தை அதிகம் அதிகம் படிக்க வேண்டும் என்ற தேடலும் நாளுக்கு நாள் முஸ்லிம்களிடம் அதிகரித்து வருவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
இந்தியாவில் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டு ஏறக்குறைய 10 ஆண்டுகளில் 9-11-2011 அன்று அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டதும் அதனை தொடர்ந்து அன்றைய அமெரிக்க ஜனாதிபதி “இது சிலுவை யுத்தம்“ என்று பிரகனப்படுத்தி தொடர்ந்து ஈராக், ஆஃப்கானிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்ததும், அதற்குத் துணையாக சர்வதேச மீடியாக்களின் இஸ்லாத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரங்களும் உலக முஸ்லிம்களையும் இந்திய முஸ்லிம்களையும் உசுப்போ உசுப்பு என்று உசுப்பி விட்டது.
அதன் விளைவாக இப்போது வட ஆஃப்ரிக்காவில் உள்ள முஸ்லிம் நாடுகளில் 40 ஆண்டுகளாக சர்வதிகார ஆட்சி நடத்திய அமெரிக்க, இஸ்ரேல் அடிமைகளாக இருந்த ஆட்சியளர்களை புரட்சியின் மூலம் அடையாளம் இல்லாமல் ஆக்கியுள்ளது முஸ்லிம் சமூகம்.
இரட்டைக் கோபுர இடிப்பிற்கு பிறகான நிகழ்வுகள் உலக முஸ்லிம்களிடம் இஸ்லாம் குறித்த புரிதல், தேடல், விழிப்புணர்வு அதிகரித்திருப்பதை தெளிவாக காட்டுகிறது.
தமிழகத்திலும் பாகுபாடு இல்லாமல் முஸ்லிம்கள் அனைவரிடமும் இஸ்லாமியத்தேடல் அதிகரித்துள்ளது. இஸ்லாமியப் புத்தகங்கள் அதிகம் வெளியிடப்பட்டு தெளிவுகளும், சிந்தனைகளும் பெருகி விவாதம் வரை முற்றி சலசலப்பை ஏற்படுத்தும் அளவிற்கு இஸ்லாமிய எழுச்சி அதிகரித்துள்ளது. இந்த எழுச்சி ஒரு சரியான இலக்கை நோக்கி நகர்ந்து வருகிறது.
அது குழந்தைகளை தொடக்கம் முதல் இஸ்லாமியக் கல்வியோடு சேர்த்து கல்வி கற்பிக்க வேண்டும் என்கிற சிந்தனை முஸ்லிம்களிடம் பெருகி வருகிறது. படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளையும் கூட இஸ்லாமியப் பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்ற முடிவோடு தமிழகத்தில் சிறந்த இஸ்லாமிய கல்விக் கூடங்கள் எங்கு உள்ளன என்று தேடி வருகின்றனர்.
மதரஸாக்களில் படிக்க வைத்து மார்க்கப் பாடத்திலும் உலகியல் பாடத்திலும் மேதைகளாக உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை சமூகத்தின் மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பெருகி வருகிறது. இதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்திட முஸ்லிம் சமுதாயம் தயாராக மாறி வருகிறது.
ஆனால் முஸ்லிம்களுக்கு தரமான சூழ்நிலையில் மார்க்க கல்வியை உலகியல் பாடங்களோடு சேர்த்துத் தருவதற்கு பல மதரஸாக்கள் தயாராக இல்லை. வெள்ளையர்களின் சதி வலையில் சிக்கிய மதரஸாக்கள் இன்னமும் சூழ்ச்சியை அறியாமல் அல்லது அறிந்து கொள்ள விரும்பாமல் மார்க்க கல்வி – உலக கல்வி என்று பிரித்து அறிவை கூறு போட்டதன் விளைவு பலபாரம்பர்ய மதரஸாக்கள் முஸ்லிம்களால் புறக்கணிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மூடு விழா நடத்தப்பட்டு வருகின்றன.
தாங்கள் படிக்காத, அறியாத, தங்களது கவனத்திற்கு வராத எதுவும் மார்க்கத்தில் அனுமதி இல்லை என்று தங்களது அறியாமையை காட்டிக் கொள்ளாமல் மார்க்கத்தின் மீதே குற்றம் சுமத்தும் வழக்கம் சில மதரஸாக்களை நடத்தும் பொறுப்பாளர்களிடம் இருக்கிறது.
குறைந்த பட்சம் 10, 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி ஒரு பட்டப்படிப்புடன் ஆலிம் பட்டம் கொடுத்தால் கூட போதும் கொள்கைக் குழப்பங்களை மறந்து மதரஸாக்களில் தங்கள் குழந்தைகளை சேர்த்திட முஸ்லிம் சமூகம் தயாராகவே இருக்கிறது.
மதரஸாக்களின் பொறுப்பாளர்கள் தங்கள் பிள்ளைகளை மட்டும் பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைத்து பட்டம் பெற வைத்துள்ளனர். மதரஸாவில் படிக்கும் மாணவர்களுக்கு அந்தக் கல்வியை மறுக்கின்றனர்.
இன்றைய நவீன உலகின் சவால்களை எதிர் கொண்டு வெற்றி பெறும் அளவிற்கு முஸ்லிம்களின் முதுகெலும்பான, மூல வித்தான மதரஸாக்கள் நவீனப் படுத்தப்பட வேண்டும் என்ற சிந்தனை இன்றைய பல தமிழக மதரஸாக்களின் பொறுப்பாளர்களுக்கு இல்லை.
இஸ்லாம் வலியுறுத்தும் கல்வித்திட்டத்தின் அடிப்படையில் 1300 ஆண்டு காலம் இந்திய முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய இறையியலையும், வாழ்வியலையும் பிற அறிவையும் சேர்த்து போதித்த, வரலாற்றில் வாழ்ந்த கண்ணியமிக்க உலமாக்கள் காட்டிய வழியில் இரண்டு கல்வியும் இணைக்கப்பட்ட மதரஸாக்களைத் தேடி தமிழக முஸ்லிம் சமூகம் அலைந்து கொண்டிருக்கிறது.
சென்னை வண்டலூர் ஆலிம் புகாரி அரபிக் கல்லூரி, திண்டுக்கல் அந்நூர் அரபிக் கல்லூரி, ணிசிஸி ரோட்டில் உள்ள பிலாலியா அரபிக் கல்லூரி, கீழக்கரை, ஷி.றி.பட்டிணம், தொண்டி, தூத்துக்குடி, மற்றும் கும்பகோணம் அருகில் உள்ள பரக்கதாபாத் போன்ற ஊர்களில் உள்ள மதரஸாக்கள் மாணவர்களால் நிரம்பி வழிகிறது.
இந்த மதரஸாக்கள் சிலவற்றில் கல்வியின் தரம் குறைவாக இருந்தாலும் கூட இரண்டு கல்வியும் கிடைக்கிறது என்பதாலேயே மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர்.
அதே நேரத்தில் பள்ளித் தேர்வுகள் எழுதுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட மதரஸாக்கள் பொழிவிழந்து வருகிறது. பழைய மாணவர்களை அழைத்து உங்கள் பகுதியிலிருந்து குறைந்தது இரண்டு மாணவர்களையாவது அனுப்ப வேண்டும் என்று அவர்களிடம் கட்டளையிடுகின்றனர். போதாக்குறைக்கு அஸாம், பீகார், போன்ற மாநிலங்களிலிருந்து ஏழை மாணவர்களை அழைத்து வந்து பெயரளவிற்கு மதரஸாக்களை நடத்தி வருகின்றனர்.
மதரஸாக்கள் என்பது மார்க்கத்தை வெறும் மந்திரமாக கற்பித்து அதை வைத்து சடங்குகள் செய்வோரை உருவாக்கும் நிறுவனங்களாக இந்திய வரலாற்றிலும் சரி உலக வரலாற்றிலும் சரி எப்போதும் இருந்தது கிடையாது.
அல்லாஹ்வுடைய தீனை உலகின் உயர்ந்த இறையியல் கொள்கையாக உலகை ஆளும் வல்லமை கொண்ட சமூக, அரசியல், பொருளாதார, மருத்துவக் கொள்கைகைய நிலைநிறுத்தும் கடந்த1300 ஆண்டுகளாக மதரஸாக்களின் கல்வி முறை அமைந்திருந்தன.
வெள்ளையர்களே அதை சிதைத்து சின்னா பின்னப்படுத்தினர்.
தமிழக முஸ்லிம்கள் மீண்டும் அல்லாஹ்வுடைய தீனை தூக்கிப் பிடிக்க வேண்டும், உலகின் உன்னதமான மக்களாக உருவாக வேண்டும். உலகளவிலான இஸ்லாமிய எழுச்சி தமிழகத்திலும் ஏற்பட வேண்டும் அதற்கு உலகத்தரம் வாய்ந்த மதரஸாக் கல்வி ஒன்றே தீர்வு. அதற்கு இன்றைய மதரஸாக்கள் உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களாக மாற்றப்பட வேண்டும்.
இன்று இல்லாவிட்டாலும் இன்ஷா அல்லாஹ் அடுத்த 100 ஆண்டுகளிலாவது அது நடைபெற வேண்டும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1