.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

கல்லூரி, பாடப்பிரிவு மட்டுமல்ல, திறனும் மிக முக்கியம்!

Unknown | 1:05 AM | 0 comments


ஒவ்வோர் ஆண்டும் பள்ளிப் படிப்பை முடித்து, பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களை சிலவிதமான சந்தேகங்கள் அலைகழிக்கின்றன. நான் எந்தப் பிரிவை தேர்ந்தெடுத்துப் படிப்பது? பொறியியல் படிப்பில் நல்ல கல்லூரியில் படிப்பதுதான் முக்கியமா? அல்லது குறிப்பிட்ட பாடப்பிரிவுதான் முக்கியமா? என்ற குழப்பங்கள்தான் அவை. இதுபோதாது என்று, பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் சுற்றத்தார்களின் நெருக்கடிகள் மற்றும் கன்னாபின்னாவென்ற ஆலோசனைகள், மாணவர்களின் நிலையை இன்னும் மோசமாக்குகின்றன.
பள்ளிப் படிப்பின்போதான சூழலில், ஆர்வத்திற்கும், திறமைக்கும் இடையிலான வித்தியாசத்தை உணர முடியாமல் பல மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த ஏதோவொரு பொறியியல் படிப்பின் பாதி கட்டத்தில் இருக்கும்போதுதான், தங்களுக்கான படிப்பு இதுவல்ல என்பதை உணர்கின்றனர். எனவே, மாணவர்களுக்கு, முறையான கல்வி ஆலோசனை தேவைப்படுகிறது.
மேலும், பெற்றோர்களைப் பொறுத்தளவில், தங்களின் பங்காக, எத்துறையில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருக்கின்றன, எத்துறையில் அதிகளவிலான முதலீடுகள் செய்யப்படுகின்றன போன்ற விஷயங்களை ஆராய்ந்து, அதன்மூலம் தங்கள் குழந்தையின் படிப்பு தேர்வுக்கு உதவ வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் நிதிநிலை அறிக்கைய படிப்பதன் மூலமாக, அடுத்த ஐந்தாண்டுகளில் எத்துறையில் அதிக வளர்ச்சி இருக்கும் என்ற தகவலை தெரிந்துகொள்ள முடியும்.
இந்திய மாணவர்களைப் பொறுத்தவரை, பெரிய பிரச்சினை என்னவென்றால், அவர்கள் தங்களின் முடிவுகளை, இறந்தகாலத்தை அடிப்படையாக கொண்டே மேற்கொள்கின்றனர். ஆனால், எதிர்காலத்தை கணித்து, தற்போதைய நடைமுறையை கவனத்தில் கொண்டு அதன்படி, தங்களின் எதிர்கால கல்வித் திட்டத்தை வகுப்பதே புத்திசாலித்தனம். உதாரணமாக கூறவேண்டுமெனில், உலகளவில், ஆற்றல், உள்கட்டமைப்பு, வங்கியியல், நிதி மற்றும் முதலீடு போன்ற துறைகளில், உலகம் முழுவதும் அதிக வாய்ப்புகள் குவிந்துள்ளன.
இதேபோன்று, எதிர்காலத்தில், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், கணிப்பொறி அறிவியல், ஜியோ இன்பர்மேடிக்ஸ், மெட்டீரியல் சயின்சஸ் இன்ஜினியரிங், பார்மசூடிகல் இன்ஜினியரிங், பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் எலக்ட்ரோகெமிக்கல் இன்ஜினியரிங் போன்றவை சிறப்பான வளர்ச்சியை அடையும் துறைகளாக மதிப்பிடப்படுகின்றன.
ஆனால், இங்கு ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மேற்கூறிய படிப்புகளை மட்டுமே எடுத்துக்கொண்டு, மற்ற துறை தொடர்பான படிப்புகளைப் படித்தால், வாய்ப்புகளே இல்லை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. மேற்கூறிய துறைகளில், அதிக முதலீடுகள், அதிக திட்டப் பணிகள் மற்றும் வாய்ப்புகள் இருக்கும் என்பதே அதன் அர்த்தம்.
சுய தொழிலில் ஈடுபட விரும்பும் மாணவர்களுக்கு, உணவு தொழில்நுட்பம் மற்றும் பிரிண்டிங் தொழில்நுட்பம் ஆகியவை பொருத்தமானவை. அதேசமயம், இத்துறைகளில் எடுத்தவுடனேயே ஒருவர் அதிகம் சம்பாதித்து பெரிய ஆளாகி விடலாம் என கனவு காணக்கூடாது. முறையான பயிற்சி எடுத்து, சரியான அனுபவம் பெற்று, தொழிலின் நுணுக்கங்களைக் கற்று தேற வேண்டும். பிறகுதான், நிறைய சம்பாதிக்க தொடங்கி, பலருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கும் நிலையை அடையலாம்.
உள்கட்டமைப்புத் துறையில் பெரிய வளர்ச்சி இருப்பதால், கட்டமைப்பு(Architecture) துறையை மறந்துவிடக்கூடாது. இது ஒரு நல்ல துறையாகும். தற்போதைய நிலையில், இந்தியாவில் மட்டும், 30,000 ஆர்கிடெக்டுகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. மேலும், படைப்புத்திறனும், வரைதலில் ஆர்வமும் உடைய மாணவிகளுக்கு, இந்த ஆர்கிடெக்சர் படிப்பு ஏற்றது.
ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு, பயோடெக்னாலஜி, பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஜெனடிக் இன்ஜினியரிங் போன்ற துறைகள் ஏற்றவை. மேற்கூறிய துறை சார்ந்த பணிகளில் சிறந்த விளங்க, அவை தொடர்பான இளநிலைப் படிப்புகளோடு, முதுநிலைப் படிப்புகளையும், பிஎச்.டி., படிப்புகளையும் முடிக்க வேண்டும். அப்போதுதான், நீங்கள் மேம்பட்ட நிலையை அடைய முடியும்.
இன்றைய சூழலில், ஒரு மாணவர், தனது எதிர்கால தொழில் வாய்ப்பாக, எப்போதுமே, முதல்நிலை துறையையே(Primary field) தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாம் நிலை துறையை(Secondary field) தவிர்க்க வேண்டும். இதற்கு உதாரணம் கூறவேண்டுமெனில், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்வதைவிட, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம். ஏனெனில், இரண்டாம் நிலை துறையில், ஆரம்ப நிலையில், உங்களுக்கான பணி வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும். நிறைய கஷ்டப்பட நேரிடும். ஆனால், முதல்நிலை துறை, அதற்கு நேர்மாறானது.
முதல்நிலைத் துறையை தேர்ந்தெடுப்பதின் மூலம், ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில், முதுநிலை படிப்புகளில் இடம் பிடிப்பதற்கான GATE தேர்வையும், நம்பிக்கையுடன் எழுத முடியும். ஏனெனில், GATE தேர்வானது, Secondary பாடங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பதை நினைவில் வைப்பது முக்கியம். மேலும், உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ, விரும்பும் இடங்களில் மேற்படிப்பை மேற்கொள்ள, இளநிலையில் தேர்வுசெய்யும் Primary பாடங்களே உகந்தவை.
உங்களின் தகுதி, உங்களின் திறன் மற்றும் திறனாய்வு போன்றவையே, இந்த நேரத்தில் முக்கியமானவை. கடந்த 2000ம் ஆண்டுகளில், என்ன பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கலாம் என்பதற்கே மாணவர்கள் முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால், 2010ம் ஆண்டுகளில், பாடப்பிரிவைக் காட்டிலும், எந்தக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால், இன்றைய நிலையில், இந்த இரண்டோடும் சேர்த்து, உங்களின் திறமை என்ன என்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது.
பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களிலேயே, வேலைவாய்ப்பு என்பது, தற்போதைய நிலையில், 60% முதல் 70% என்ற அளவிலேயே இருக்கிறது. ஏனெனில், பணியின் தரம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. நிறுவனங்கள், சிறந்த திறனுடைய நபர்களையே, வேலைக்கு அமர்த்துவதில் முக்கியத்துவம் கொடுக்கின்றன.
மேலும், நமது பாடத்திட்டத்திற்கும், நிறுவன பணிகளின் தன்மைக்குமான இடைவெளி, நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிக்கும் இடைவெளி, பணி வாய்ப்புகளை பாதிக்கிறது. எனவே, பொறியியல் படிக்கும் மாணவர்கள், தங்களின் படிப்புடன், பல்வகையான மென்திறன்களையும்(soft skills) மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்றைய இந்தியாவில், ஆண்டுதோறும் படித்து வெளிவரும் பொறியியல் பட்டதாரிகளில், 25% பேர் மட்டுமே பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1