.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

மாறிவரும் உலகில் எப்படி வெற்றியடைவது?

Unknown | 1:07 AM | 0 comments


அகப்பார்வை, நுணுக்க சிந்தனை, மீளும் திறன், குழுப் பணி, வலுவான தகவல்தொடர்பு, நேர மேலாண்மை மற்றும் படைப்புத்திறன் ஆகிய அம்சங்கள், ஒருவரின் வெற்றிக்கான அடிப்படை அச்சாரங்கள்.
இன்றைய நிலையில், மாற்றமானது மிக விரைவாக நிகழ்ந்து வருகிறது. டிஜிட்டல் புரட்சியால், தகவல்கள், விரைவாகவும் எளிதாகவும் கிடைப்பதால், விதிமுறைகள் மாறிவிட்டன. ஐ.பி.எம்., விளம்பரம் ஒன்று இவ்வாறு கூறுகிறது, "அமெரிக்காவிலுள்ள அனைத்து நூலகங்களிலுமுள்ள தகவல்களைக் காட்டிலும், அதிகமான தகவல்கள் ஒரு நாளில் உருவாக்கப்படுகின்றன" என்பதுதான் அது. இத்தகவல்களை பெறுவது மிகவும் எளிதான ஒன்றாகவும் இருக்கிறது. மொபைலில் இண்டர்நெட் போன்றவை இவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
விரைந்த மாற்றத்திற்கான சில உதாரணங்களை இங்கே பார்க்கலாம்;
கடந்த 2006ம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும், 2.5 பில்லியன் கூகுள் தேடல்கள் இருந்தன. ஆனால், 2008ல் அந்த எண்ணிக்கை 30 பில்லியனை தொட்டது. தற்போது, அது 100 பில்லியனாக உள்ளது.
இண்டர்நெட் வசதியுள்ள சாதனங்களின் எண்ணிக்கை, கடந்த 1984ம் ஆண்டில், 1000 என்ற அளவில் இருந்தது. 1992ம் ஆண்டில் 1 மில்லியன் என்ற அளவிற்கு வந்தது. அதேசமயம், 2008ம் ஆண்டில் 1 பில்லியனாக உயர்ந்தது. அந்த எண்ணிக்கை இந்த 2013ம் ஆண்டில் அந்த அளவு 1 டிரில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப தகவல்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு 2 வருடத்திலும் இரு மடங்காக அதிகரிக்கின்றன. எனவே, பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், தங்களின் முதலாமாண்டில் படித்த விஷயங்கள், அவர்கள் மூன்றாமாண்டு செல்லும்போது காலாவதியாகி விடுகின்றன. எதிர்கால பணிசெய்யும் உலகம், விரைவாக மாறிக்கொண்டிருக்கும் ஒன்றாக உள்ளது. எனவே, தற்போதைய மாணவர்கள், எதிர்காலத்தில், தங்களின் வாழ்க்கை முழுவதும் ஒரே மாதிரியான பணியை பெறுவார்களா? என்பதை நம்மால் கூற முடியாது.
ஒரு சராசரி பணியாளர், தனது 40வது வயதை அடையும்போது, குறைந்தபட்சம் 10 பணிகளுக்கு மாறியிருப்பார் என்று அமெரிக்க தொழிலாளர் துறை கூறுகிறது. இதுபோன்ற நிலை இந்தியாவிற்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது. எதிர்கால வேலைவாய்ப்பு சந்தையைப் பற்றி ஒரு சமீபத்திய வீடியோ கிளிப் இவ்வாறு கூறுகிறது, "இப்போது நடைமுறையில் இல்லாத பணிகளுக்காகவும், இதுவரை கண்டுபிடிக்கப்படாத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காகவும், இதுவரை அறியப்படாத சிக்கல்களை தீர்ப்பதற்காகவும் நாங்கள் மாணவர்களை தயார்படுத்துகிறோம்" என்பதுதான் அது.
தற்போது பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும் மாணவர்கள், தாங்கள் படிக்கும் அம்சங்கள், எதிர்காலத்தில் தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் பணிக்கு தொடர்பற்றதாக இருப்பதை உணர்வர். ஏனெனில், உலகம் அந்தளவு வேகமாக மாறிக்கொண்டுள்ளது. இங்கேதான், வெற்றிக்கான உண்மை தேவைகளை புரிந்துகொள்ள வேண்டிய தேவை எழுகிறது. இக்கட்டுரையின் முதலில் சொல்லப்பட்ட அம்சங்கள்தான் அவை. பல்வேறான துறைகளை சார்ந்த தொழில் நிபுணர்களுடன் விரிவான கருத்துப் பரிமாற்றம் செய்த பின்னரே, மேற்கூறிய வெற்றிக்கான அம்சங்கள் அடையாளம் காணப்பட்டன. ஒருவர், எந்த துறையில் நுழைந்தாலும், அதில் அவர் வெற்றிக்கொடி நாட்ட, மேற்கூறப்பட்ட 7 பண்புகளும் இன்றியமையாதவை.
வெற்றிக்கான அம்சங்கள்
நுணுக்க சிந்தனை
மிகவும் சிக்கலான பிரச்சினைகளை தீர்க்க, அதிநுட்பமாக சிந்திக்க வேண்டும். அப்போதுதான், செயல்படுத்தும் வகையிலான பரிந்துரைகளைப் பெற முடியும்.
படைப்பாக்கம்
தற்போதைக்கு நடைமுறையில் இருக்கும் விஷயங்களை தாண்டிச் சென்று சிந்தித்து, புதிய முறைகளையும், புதிய எண்ணங்களையும் உருவாக்க வேண்டும்.
வலுவான தகவல்தொடர்பு
பல்வேறான பின்னணிகளைக் கொண்ட நபர்களை, ஆர்வமூட்டி உற்சாகப்படுத்த, அந்த புதிய எண்ணங்களை, சிறப்பான வகையில் தெரிவிக்க வேண்டும்.
குழுப் பணி
நிர்ணயிக்கப்பட்ட கருத்தாக்கங்களின்படி, லட்சியத்தை அடைய, குழுவுடன் சேர்ந்து, ஒற்றுமையுடன் பணிபுரிய வேண்டும்.
மீளும் திறன்
பாதிப்பு ஏற்பட்டால், அந்த நிலையிலிருந்து விரைவில் மீண்டு, பழைய நிலையை அடையும் திறனைப் பெற்றிருக்க வேண்டும்.
நேர மேலாண்மை
விஷயங்களின் முக்கியத்துவம் அறிந்து, அதற்கேற்றவாறு, ஒவ்வொன்றுக்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும்.
அகப்பார்வை மற்றும் பதிலீடு
உங்களைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களையும் தாங்கிக் கொண்டு, அதற்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ளும் திறனைப் பெற்றிருக்க வேண்டும்.
பெற்றோர்களும், நமது கல்வித் திட்டமும், இத்தகைய தன்மைகளை குழந்தைகள் பெறும் வகையில், அவர்களுக்கு உதவ வேண்டும். வெறுமனே ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு, மாணவர்களுக்கு கற்பித்தலைப் போல், இந்த செயல்பாடு அவ்வளவு எளிதானதல்ல.
தொடர்ந்த அனுபவங்கள், பல்வேறான பின்னணிகளைக் கொண்ட மக்களிடத்தில் பணிசெய்தல் மற்றும் வாழ்வின் பல்வேறான கட்டங்களில், நம் உடன் பணிபுரிவோர் மற்றும் வாழ்பவர்களுடனான பரிமாற்றங்கள் ஆகியவற்றின் மூலமே அந்த தகுதிகளை அடைய முடியும். மேற்கூறப்பட்ட 7 பண்புகளைப் பெற்ற ஒருவர், வாழ்க்கையில் பெறும் வெற்றிகளுக்கு அளவேயிருக்காது.
இத்தகைய பண்புகளைப் பெற்றிருக்கும் ஒருவர், ஒரு குறிப்பிட்ட பணியிலோ அல்லது நாட்டிலோ மட்டும் வெற்றியடைவதில்லை. மாறாக, அவர் எந்த துறைக்கு மாறினாலும் அல்லது எந்த நாட்டிற்கு சென்றாலும், வெற்றி அவரைத் தேடிவரும். ஏனெனில், தினந்தோறும் பெரியளவிலான மாற்றங்களை சந்தித்துவரும் இந்த உலகில், வெற்றிக்கான பண்புகளைப் பெற்றால்தான், இளையதலைமுறை சாதித்து, நிலைத்து நிற்க முடியும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1