+2வில் தோல்வி அடைந்த மாணவர்கள் உடனடி தேர்வில் தேர்ச்சி பெற பாடுபட வேண்டும் ஆசிரியர்களுக்கு கலெக்டர் உத்தரவு.
பெரம்பலூர், : பிளஸ்2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் உடனடித் தேர்வில் தேர்ச்சிபெற தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று கலெக்டர் தரேஸ் அகமது தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 90.59சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 6.17சதவீதம் அதிகம். அதேபோல அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 10.76 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகள் 70.83 சதவீதம்.
இந்தஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகள் 81.59 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதேபோல அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி விகிதம் 13.52 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் பிளஸ்&2 தேர்ச்சி விகிதத்தில் மாநிலஅளவில் 2012ம் ஆண்டு 22வது இடத்தில் பின்தங்கியிருந்த பெரம்பலூர் மாவட்டம், இந்த ஆண்டு முன்னேறி 15வது இடத்தைப் பிடித்துள்ளது.
மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் காண காரணமான அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாலை 4 மணிக்கு நடந்தது.
விழாவுக்கு கலெக்டர் தரேஸ் அகமது தலைமை வகித்து பேசியதாவது:
அரசுப் பள்ளிகளில் மேலப்புலியூர், கூத்தூர் மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. வருமாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் 100 சதவீதம் தேர்ச்சிபெற தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். குறிப்பாக இந்தஆண்டு பிளஸ்&2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள், உடனடித்தேர்வில் தேர்ச்சிபெற ஆசிரியர்கள் உதவ வேண்டும். தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் முதல் 10இடங்களுக்குள் பெரம்பலூர் மாவட்டம் முன்னேற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மல்லிகா, மாவட்டக் கல்வி அலுவலர் சுப்ரமணியன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Category: உயர் கல்வி
0 comments