சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி தொடரும் விபத்து: விமான நடைமேடை மேற்கூரை இடிந்து விழுந்தது!
மீனம்பாக்கம் .
சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு முனையத்தில் விமான நடைமேடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தொடரும் விபத்துகள்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் செயல்படுகின்றன.
இங்கு கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 7 முறை மேற்கூரைகளும், 6 முறை கண்ணாடி கதவுகளும், 8 முறை தடுப்பு கண்ணாடிகளும், 4 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும் உடைந்து விழுந்துவிட்டன.
ஆனால் இந்த விபத்துகளில் பயணிகளுக்கோ, ஊழியர்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.மேற்கூரை இடிந்து விழுந்தது
இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் விமானநிலையத்தில் இருந்து விமானத்தில் ஏற உதவிடும் 18 விமான நடைமேடைகள்(ஏரோபிரிட்ஜ்) உள்ளன. நேற்று அதிகாலை 6.30 மணிக்கு விமான நிறுத்தும் இடம் எண். 35–க்கு செல்லக்கூடிய ஏரோபிரிட்ஜின் மேற்கூரையின் ஒரு பகுதி 4 அடி உயரமும், 4 அடி அகலமும் இடிந்துவிழுந்துவிட்டது.
தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் வந்து உடைந்த பகுதிகளை அகற்றினார்கள். மேலும் இந்த ஏரோபிரிட்ஜ் பகுதியை பயன்படுத்த தடை விதித்தனர். இதில் பராமரிப்புபணிகள் விரைந்து முடித்து இன்று முதல் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினார்கள்.
அதிகாலை 6.30 மணிக்கு பதில் 7 மணிக்கு மேற்கூரை விழுந்து இருந்தால் மொரீசியசில் இருந்து விமானத்தில் இருந்துவந்த பயணிகள் பாதிக்கப்பட்டு பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாகியிருப்பார்கள்.
இந்த விமானத்தில் வந்த பயணிகள் அருகில் உள்ள 36–வது ஏரோபிரிட்ஜ்ஜை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Category: மாநில செய்தி
0 comments