பெரம்பலூரில் பரபரப்பு! அரசு ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!!
பெரம்பலூர், அக். 13:
பெரம்பலூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளருக்கு சொந்தமான வீட்டில் நேற்றுமுன்தினம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. குண்டு வீசிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் நகராட்சி 1வது வார்டு ஆலம்பாடி சாலை அன்புநகரை சேர்ந்தவர் அய்யாவு (50). பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அன்புநகரில் உள்ள தனது வீட்டை, கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்க மாவட்ட தலைவர் நெடுஞ்செழியனுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை காலி செய்து விட்டார். தற்போது அந்த வீட்டை வாடகைக்கு விடுவதற்காக அய்யாவு ஆட்களை வைத்து பெயிண்ட் அடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் 3 பீர் பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி அய்யாவு வீட்டின் மீது வீசினர். இதில் 2 குண்டுகள் வெடித்து வீட்டின் முன் பகுதி தீப்பிடித்தது. இதில் வீட்டு சுவரின் ஒரு பகுதி கருப்பாக மாறியது. ஒரு குண்டு வெடிக்காமல் கிடந்தது.
தகவலறிந்த அய்யாவு அங்கு சென்று பார்த்தார். வீட்டில் கரும்புகை மட்டும் இருந்தது. பெரிய அளவில் சேதம் இல்லை. இதுகுறித்து அவர் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வெடிக்காமல் கிடந்த ஒரு பெட்ரோல் குண்டை கைப்பற்றினர்.
பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார், எதற்காக வீசினார்கள் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியிருப்பு பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Category: மாவட்ட செய்தி
0 comments