அபுதாபியில் பள்ளி பஸ்சுக்குள் மூச்சுத் திணறி 4 வயது இந்திய மாணவி பரிதாப பலி!!
![]() |
நாஸிஹா லால் அகமது |
பள்ளி பஸ்சுக்குள் 4 வயது இந்திய மாணவி மூச்சுத் திணறி பரிதாபமாக பலியான சம்பவம் அபுதாபி வாழும் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியைச் சேர்ந்த நசீர் அகமது என்பவர் அபுதாபியில் பணியாற்றிக் கொண்டு தனது மனைவி குழந்தையுடன் இங்கேயே வசித்து வருகிறார்.
இவரது நான்கு வயது மகள் நாஸிஹா லால் அகமது, அபுதாபியில் உள்ள ஒரு இந்தியப் பள்ளியில் மழலையர் வகுப்பில் பயின்று வருகிறாள். சம்பவத்தன்று, எப்போதும் போல் காலை 6.30 மணியளவில் அகமதுவின் வீட்டு வாசலில் அந்தப் பள்ளியின் பஸ் வந்து நின்றது.
பெற்றோரிடம் கையை அசைத்து விடைபெற்ற நாஸிஹா, பஸ் போகும் வேகத்தில் வீசிய மெல்லிய காற்றில் தன்னை மறந்து உறங்கிப் போனாள். பள்ளிக்கூடத்தை பஸ் வந்தடைந்த பின்னர் உள்ளே அமர்ந்திருந்ர்த பிள்ளைகளை எல்லாம் பஸ்ஸை விட்டு கீழே இறக்கி வகுப்புகளுக்கு அனுப்பி வைத்த பஸ்சின் டிரைவரும், அவரது உதவியாளரும் பஸ்சினுள் சிறுமி நாஸிஹா அயர்ந்து தூங்குவதை கவனிக்க தவறி விட்டனர் என்று கூறப்படுகிறது.
பஸ்சை பூட்டிக் கொண்டு டிரைவர் சென்ற பிறகு கண் விழித்த நாஸிஹா, தனியாக இருப்பதை எண்ணி அழுதிருக்கிறாள். கதவுகளும், கண்ணாடி ஜன்னல்களும் பூட்டப்பட்டிருந்த அந்த பஸ்சினுள் இருந்தபடி அந்த குழந்தை கதறிய அழுகுரல் யாருடைய காதையும் எட்டவில்லை.
இதற்குள் பாலைவனப் பிரதேசமான அப்பகுதியில் அடித்த கடுமையான வெயிலால் ஏற்பட்ட களைப்பினாலும், காற்று வர வழியில்லாத பஸ்சினுள் சிக்கிக் கொண்டதால் ஏற்பட்ட சோர்வினாலும் மூச்சுத் திணறிய அவள் மயங்கிச் சுருண்டு கீழே விழுந்தாள்.
பகல் 12 மணியளவில் அந்த பஸ்சை ஏதோ காரணத்துக்காக திறந்துப் பார்த்த பள்ளி அலுவலர்கள், உள்ளே நாஸிஹா பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் நாஸியாவின் பெற்றோருக்கு அளித்த தகவலையடுத்து, விரைந்தோடி வந்து, அன்பு மகளை பிணக்கோலத்தில் கண்ட அவர்கள் கதறி அழுதனர்.
நாஸிஹாவின் அகால மரணத்துக்கு பள்ளி நிர்வாகம்தான் பொறுப்பு என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பஸ்சின் டிரைவர்தான் காரணம் என்பது தெரியவந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Category: அபுதாபி, வளைகுட செய்தி
0 comments