பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் மின்சாரம் தாக்கி தந்தை–மகன் பலி ! கன்றுக்குட்டியை காப்பாற்ற சென்றபோது பரிதாபம்!
வயலில் மின்கம்ப கம்பியில் கட்டியிருந்த கன்றுகுட்டியை காப்பாற்ற சென்ற தந்தை–மகன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தனர்.
தந்தை –மகன்
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் ராமர்(வயது 75). விவசாயி. இவரது மகன் துரைராஜ்(45). நேற்று மாலை ராமரும், துரைராஜுவும், மதுரகாளிஅம்மன் கோவில் அருகே உள்ள தங்களது வயற்காட்டிற்கு சென்றனர். பின்னர் அங்குள்ள மின்கம்பத்தின் எர்த் கம்பியில் கன்றுக்குட்டியை கயிற்றால் கட்டியிருந்தனர்.
திடீரென கன்றுகுட்டி மீது மின்சாரம் தாக்கியது. இதனால் அலறிய கன்றுக்குட்டியின் சத்தம் கேட்டு அங்கு வந்த ராமர், கன்றுகுட்டியை கட்டியிருந்த கயிற்றை மின்கம்பியில் இருந்து அவிழ்க்க முயன்றார். அப்போது ராமரை மின்சாரம் தாக்கியது.
மின்சாரம் தாக்கி பலி
இதனால் ராமரின் அலறல் சத்தத்தை கேட்ட துரைராஜ், அங்கு சென்று ராமரை விடுவிக்க முயன்றார். அப்போது துரைராஜுவையும் மின்சாரம் தாக்கியது. இதையடுத்து ராமர், துரைராஜ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மேலும் கன்றுக்குட்டியும் இறந்தது.
மின்சார கம்பி அறுந்து எர்த் கம்பியில் விழுந்ததால் மின்சாரம் தாக்கி ராமர், துரைராஜ் மற்றும் கன்றுகுட்டி இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்
Category: மாவட்ட செய்தி
0 comments