பெரம்பலூரில் மருத்துவமனை முற்றுகை–சாலை மறியல் பிரசவத்தின் போது பெண் சாவு கண்டித்து போராட்டம்!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் மணிவேல். விவசாயி. இவரது மனைவி உடைச்சி(வயது26). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த உடைச்சி தனது முதல் பிரசவத்துக்காக பெரம்பலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் உடைச்சி மருத்துவமனையில் இறந்தார். பிரசவத்தின் போது தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி உடைச்சியின் உறவினர்களும் பொது மக்களும் நேற்று மாலை பெரம்பலூர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதே சம்பவத்தை கண்டித்து உடைச்சியின் உறவினர்களும் பொது மக்களும் குன்னம் அண்ணாநகரில் பெரம்பலூர்–அரியலூர் சாலையில் சுமார் 100 பேர் திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது. இது குறித்து குன்னம் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் பெரம்பலூர், குன்னம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Category: மாவட்ட செய்தி
0 comments