இன, மத வேறுபாடின்றி பாதிக்கப்பட்டோருக்கு அடைக்கலம் கொடுக்கும் காஷ்மீர் ஜூம்ஆ பள்ளிவாயல் !
ஸ்ரீநகர்: வெள்ளத்தின் நடுவே அனைத்து மதத்தவர்களுக்கும் இருப்பிடமும் உணவும் அளித்து மத ஒற்றுமைக்கு சான்றாக விளங்குகிறது ஜம்மு காஷ்மீரிலுள்ள ஜூம்ஆ மஸ்ஜித். காஷ்மீரில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. பல ஆயிரம் மக்கள் உடமைகளை இழந்து வெள்ளத்தின் நடுவே தத்தளித்து வருகின்றனர்.
இவர்களை காக்கும் பணியில் இந்திய ராணுவம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அரசு சார்பில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் இந்த முகாம்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்பதால் மக்கள் தெரிந்தவர்கள் வீடுகளிலும், பள்ளிகளிலும் தங்கியுள்ளனர்.
இப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது ஹைதர்போரா பகுதியிலுள்ள ஜும்மா பள்ளிவாயல். வெள்ள பாதிப்பில் சிக்காமல் உயரமான பகுதியில் இந்த பள்ளிவாயல் அமைந்துள்ளது. எனவே பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் இந்த பள்ளிவாயலில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதில் முஸ்லிம்கள் மட்டுமின்றி, இந்துக்களும் பெரும்பான்மையாக உள்ளனர். குறிப்பாக, வெளி மாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக காஷ்மீர் வந்த இந்துக்கள் இந்த பள்ளிவாயலில் தங்கியுள்ளனர்.
பள்ளிவாயலில் தங்கியுள்ள ஆண்கள் மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள் போன்ற பலருக்கும் இந்த பள்ளிவாயல் ஆபத்தில் இருந்து காப்பாற்றும் புகலிடமாக மாறியுள்ளது. 58 வயதான பஷீர் அகமது அகூன் சம்பவம் குறித்து இப்படி கூறுகிறார்:
‘ஆகஸ்ட் 31ம்தேதி சாயங்கால வேளையில், நானும் எனது குடும்பத்தார் மூவரும் வீட்டில் இருந்தோம். அப்போது திடீரென எங்கள் வீட்டை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. கிடைத்த படகை வைத்து எனது மகளை முதலில் மஸ்ஜிதுக்கு அனுப்பி வைத்தேன். பிறகு நாங்களும் வந்து சேர்ந்தோம். அப்போதிருந்து மஸ்ஜிதில்தான் வசிக்கிறோம்’ என்றார். பஷீர் அரசு ஊழியர் என்பது இதில் கவனிக்கத்தக்கது.
காலிதா அக்தர் என்ற 60 வயது பெண்மணி கூறும்போது ‘தென்க்புரா பகுதியில் எங்கள் வீடு உள்ளது. வீட்டில் உள்ள 7 பேரும் 31ம்தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி பக்கத்திலுள்ள மருத்துவமனையொன்றில் தங்கினோம். சற்று நேரத்தில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. உடனடியாக பொலீசாருக்கு தகவல் அளித்தோம். ஆனால் அதற்கு முன்பாக ராணுவத்தினர் வந்து எங்களை பத்திரமாக மீட்டனர். அவர்களுக்கு நன்றி. அதன்பிறகு இந்தப் பள்ளிவாயலில் குடும்பத்தோடு தங்கியுள்ளோம்’ என்றார்.
மூன்றடுக்கு கொண்ட குறித்த மஸ்ஜிதில் மொத்தம் 2400 பேர் தங்கியுள்ளனர். அவர்களுக்கு சாப்பாடு வழங்குவதற்கு என்று சமுதாய சமையலறை உருவாக்கப்பட்டுள்ளது. தானமாக மக்கள் அளிக்கும் துணிகள் இங்கு வந்து தரப்படுகின்றன.
Category: மாநில செய்தி
0 comments