தமிழக சிறைகளில் இருந்த 2,500 கைதிகள் விடுதலை!
தமிழக சிறைகளில் இருந்த 2,500 கைதிகள் விடுதலை!
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நீண்டகாலமாக சிறைகளில் இருந்த விசாரணை கைதிகள் 2,500க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தியா முழுவதும் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் விசாரணை கைதிகளை விசாரித்து, அவர்களுடைய தண்டனை காலத்தில் பாதிக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய மற்றும் கிளைச் சிறைகளில் நேற்று லோக் அதாலத் முறையில் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்குட்பட்ட சிறிய வழக்குகள் விசாரணை நடத்தப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் வழக்குகள் மீது விசாரணை நடத்தப்பட்டு, 2,500க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னை புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் கிளைச் சிறைகளில் நடந்த லோக் அதாலத்தில் சுமார் 850 விசாரணை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். சென்னை மாவட்டத்தில் 290 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 260 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 304 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
சேலத்தில் 455 விசாரணை கைதிகள், நெல்லை பாளையங்கோட்டை சிறையில் இருந்து 174 விசாரணை கைதிகள், கடலூரில் 80 கைதிகளும், மதுரை மத்திய சிறையில் இருந்த 57 கைதிகள், திருச்சியில் 48 கைதிகளும் வேலூரில் 39 பேரும், கோவையில் 23 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
Category: மாநில செய்தி
0 comments