ஒரே மாதத்தில் 2,20,000 இந்தியர்களுக்கு விசா வழங்கிய சவுதி அரசு...!
இந்திய வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கும், சவுதி முதலாளிகளுக்கும் இடையே தொடர வேண்டிய ஒப்பந்த உறவுகளை சீரமைக்கும் விதமாக ஒரு உடன்பாடு இரு நாடுகளாலும் கடந்த ஜனவரி மாதம் கையெழுத்திடப்பட்டது.
இதில் டிரைவர்கள், கிளீனர்கள், காவலர்கள், பணியாளர்கள், தோட்டக்காரர்கள் மற்றும் தனியாரிடத்தில் பணிபுரியும் வீட்டுவேலை நிர்வாகிகள் போன்ற 12 பிரிவுகளுக்கான விதிமுறைகளை இந்த உடன்பாடு மேற்கொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ரமலான் புனித நோன்பு முடிந்து இந்தியத் தொழிலாளர்களைத் திரும்ப அழைத்துள்ளதாகவும், இதற்காக ஒரு மாதத்தில் அளிக்கப்பட்டுள்ள விசா அனுமதி 2,20,000 என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளதாகவும் சவுதியின் சர்வதேச விவகாரங்களுக்கான தொழிலாளர் அமைச்சகத்தின் உள்துறை செயலாளர் அகமது அல் புகைட் தெரிவித்தார்.
இவற்றுள் 44,000 விசாக்கள் வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கானது என்றும் மீதி பொது மற்றும் தனியார் பிரிவுகளுக்கானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு, மருத்துவ பரிசோதனை, முறையான தகுதி, பயிற்சி போன்ற தேவைகளால் இவர்கள் சவுதிக்கு வருவதற்கு கால தாமதம் ஏற்படக்கூடும் என்றும் இவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே சவுதியில் உள்ள ஒன்பது மில்லியன் புலம் பெயர்ந்த மக்கள் அந்நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையை பூர்த்தி செய்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் பெரும்பான்மையாக கட்டுமானத்துறை, சேவைத்துறை, வீட்டு வேலை போன்ற பிரிவுகளில் முறையான பயிற்சி பெறாத தொழிலாளர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
Category: வளைகுட செய்தி
0 comments